ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணிபுரிய வேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் 73 சதவீத அமேசான் ஊழியர்கள் வேலையை விட்டுவிட நினைப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் அமேசான் நிறுவனம் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்தது. இதன் பின் வொர்க் ஃபிரம் ஹோம் மற்றும் ரிமோட் வேலை முறைகள் இயல்பான ஓன்றாக மாறியது.
இந்நிலையில் ஹைபிரிட் எனப்படும் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்தில் வேலை, சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை என்ற முறை அறிமுகமானது. ஆனால் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என கூறுகின்றன.

இந்நிலையில் வரும் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து அமேசான் நிறுவன ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணிபுரிய வேண்டும் என அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸி ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அமேசான் ஊழியர்கள் மத்தியில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டால் வேலையை விட்டு விடுவோம் என 73 சதவீத ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிளைன்ட் என்ற இணையதளம் அமேசான் நிறுவனத்தில் பணி புரியும் 2585 ஊழியர்களிடம் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. அதில் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவிப்பு தங்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக 91 சதவீத ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 80 சதவீத ஊழியர்கள் வேறு வேலை தேட தொடங்கியதாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் தாங்கள் ஏற்கனவே வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அமேசான் தலைமை இப்படி ஒரு அறிவிப்பை வழங்கும் என எதிர்பார்க்கவில்லை என ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் வேலை செய்யும் போது தான் நிறுவனத்தின் வளர்ச்சி சாத்தியமாகும் என பெரும்பாலான ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்களாம். மேலும் ரிமோட் வேலை என்ற பெயரில் வேலைக்கு அமர்த்தி விட்டு திடீரென அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம் என சில ஊழியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பலர் குழந்தைகளை விடுத்து குடும்பத்தை விடுத்து வேலைக்காக இடம் மாறி தினமும் அலுவலகத்திற்கு சென்று வருவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அமேசான் நிறுவனம் தன் முடிவை மாற்றுவதாக இல்லை.
Written by: Devika


Click it and Unblock the Notifications