சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படுகிற ஜிஎஸ்டி வரியானது இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. பல்வேறு விதிமுறைகளை சேர்த்து ஒரே வரியாக மாற்றி வரிவிதிப்பு செயல் முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாயில் 70 முதல் 75 சதவீத வரி, 18 சதவீத ஜிஎஸ்டி ஸ்லாபில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 5 முதல் 6 சதவீத வரி வசூல் 12 சதவீத ஜிஎஸ்டி ஸ்லாபில் இருந்து வந்துள்ளதாகவும், 2024-ஆம் நிதியாண்டில் 6 முதல் 8 சதவீதம் மட்டுமே 5 சதவீத வரி ஸ்லாபில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 20240-ஆம் ஆண்டில் பல்வேறு வரி அடுக்குகளின் கீழ் சேகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி விவரங்கள் குறித்து நிதித்துறையின் இணை அமைச்சரான பங்கஜ் சௌத்ரி லோக்சபாவில் பகிர்ந்து கொண்டார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 5 சதவீதம்,12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் வரி வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் வரி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி-இலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரி விகிதங்கள் உள்ளன.
ஜிஎஸ்டி-இன் சராசரி வரி விகிதம், அரசுக்கு தேவைப்படும் வரிவிதமான 15.3 சதவீதத்தை விட குறைவாக உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி விகிதங்களை மறுபரிசீலனை செய்து தேவைப்படும் மாற்றங்களை அமைப்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதன் மூலம் வரி விகிதங்களை அதிகரித்து, வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழு, ஜிஎஸ்டி-யின் வரி விகிதங்களைப் பற்றி ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டது. அதாவது ரெவென்யூ நியூட்ரல் ரேட் (RNR) என்று சொல்லப்படுகிற ஆர்என்ஆர் விகிதத்தை 15 முதல் 15.5 சதவீதத்தில் வைத்திருக்க பரிந்துரை செய்தது. இந்த ஆர்என்ஆர் என்பது அரசின் வருவாய் குறையாமல் இருக்க நிர்ணயிக்கப்படும் வரிவிகிதமாகும்.
ஜிஎஸ்டி வருமானத்தின் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி விகிதம் 11.64 சதவீதமாக இருப்பதாக மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications