டெல்லி: இந்தியாவில் தற்போது பண பரிவர்த்தனை என்பது டிஜிட்டல் வசதிகள் மூலம் மிக எளிதாகிவிட்டது. குறிப்பாக யுபிஐ பணப்பரிமாற்ற சேவை நம் நாம் செலவு செய்யும் விதத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
10 ரூபாயில் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை நாம் எங்கு சென்றாலும், எந்த பொருள் வாங்கினாலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் அதற்கான தொகையை செலுத்துகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பர்சை எடுத்து செல்ல வேண்டாம் போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

பெரும்பாலான மக்கள் யுபிஐ பரிமாற்றம் செய்வதையே முதன்மையாக கொண்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறக்கூடிய ஒரு நாடாகவும் இந்தியா மாறி இருக்கிறது.
இவ்வாறு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி டெல்லி (ஐஐஐடி டெல்லி) ஆய்வு நடத்தியுள்ளது. அதில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் முன்பை விட பண வர்த்த பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக்கி உள்ளன என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் செலவு செய்யும் போக்கு குறித்தும் இந்த ஆய்வு முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் கைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்தாத காரணத்தால் யுபிஐ வாயிலாக தேவையற்ற செலவுகளை அதாவது அதிக செலவுகளை மேற்கொள்வதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் 75% மக்கள் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமென்ட் முறைகளை பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாக செலவு செய்துள்ளனர் என இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் 91.5% மக்கள் யுபிஐ பரிமாற்றங்கள் எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பணத்தைவிட யுபிஐ மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கிறது என்பதே பரவலாக கருத்தாக இருக்கிறது. கிட்டதட்ட 81% மக்கள் நாள்தோறும் யுபிஐ பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதாகும் , சராசரியாக 200 ரூபாய் என்ற அளவில் ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
என்பிசிஐ அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1,330 கோடியை எட்டியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்து 11,768 கோடியை எட்டியது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications