பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த முக்கியமான காரணம் நாட்டில் அதிகரிக்கும் விலைவாசியை அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அவர்களது சம்பளத்தை உயர்த்தி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிதி நிவாரணம் வழங்குவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இந்த அகவிலைப்படி உயர்வு சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கணிசமாக அதிகரிக்கும், இதனால் அவர்கள் அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க உதவும்.
அகவிலைப்படி என்பது விலைவாசி அதிகரிப்பின் தாக்கத்தை ஈடுசெய்ய அவ்வப்போது சரிசெய்யப்படும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். DA ஐ அதிகரிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தி அதாவது பர்சேசிங் பவர் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
பொதுவாக, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை நாட்டின் பணவீக்கத்தைப் பொறுத்து திருத்தம் செய்யும், இந்த திருத்தம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும். அரசு வேலையில் இருந்துகொண்டு சேவை செய்யும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியம் பெறுவோர் அகவிலை நிவாரணம் பெறுவார்கள்.
மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை 4 சதவீத அதிகரித்து, ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும் என இந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. தற்போது, அறிவிக்கப்பட்டு உள்ள 3 சதவீத உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 53% அகவிலைப்படியாகப் பெறுகின்றனர், அதே நேரத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 53% அகவிலைப்படியை நிவாரணமாகப் பெறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. ஆனால், இந்த விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications