ஒரு மாதத்திற்கு மேலாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு எல்பிஜி, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் சப்ளை நின்று போயுள்ளது. இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி வரத்து நின்று போயிருக்கிறது. இதனால் சில வாரங்களுக்கு குன்பு இந்தியாவில் கடுமையான எல்பிஜி கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரியை முற்றிலுமாக நிறுத்தி வைத்தன. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டுமே முன்னுரிமை தந்தன. மத்திய அரசும் இந்த சூழலை கருத்தில் கொண்டு நாட்டில் எஸ்மா சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்படி முன்னுரிமை என வரையறுக்கப்பட்டுள்ள துறையினருக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிலிண்டரை பதுக்கினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது, அதேபோல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகமாக எல்பிஜி கொள்முதல் செய்ய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக நிலைமை சீரடைந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு வாய்ப்பிருக்கக் கூடிய வாடிக்கையாளர்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு மாற்றாக பிஎன்ஜி எனப்படும் குழாய் வழி எரிவாயு இணைப்புக்கு மாறிக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
பிஎன்ஜி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் ஏற்படக்கூடிய எந்த ஒரு போரும் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் இணைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே வாய்ப்பு இருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி-க்கு பதிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வாறு தவற மறுப்பவர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் என அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்கள் முடிந்த அளவு பிஎன்ஜி இணைப்புக்கு மாறிக்கொள்ளலாம் என தொடர்ச்சியாக அறிவுறுத்தின. இந்த சூழலில்தான் இந்தியாவில் ஒரே மாதத்தில் 8 லட்சம் புதிய பிஎன்ஜி இணைப்புகள் தரப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் 50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்திருக்கும் மத்திய அரசு நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என கூறி இருக்கிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் தேவை 100% வணிக ரீதியிலான சிலிண்டர் தேவை 80 % பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது. நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலும் பிஎன்ஜி இணைப்புகளை பெறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்து இருக்கக்கூடிய அதிகாரிகள் அரசின் அறிவுறுத்தலை ஏற்று கிட்டதட்ட 16,000 பேர் தங்களுடைய எல்பிஜி இணைப்புகளை சரண்டர் செய்துள்ளார்களாம்.
தாமாக முன் வந்து பொதுமக்கள் எல்பிஜி இணைப்புகளை சரண்டர் செய்து பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாறி இருக்கிறார்களாம். இது தவிர சிலிண்டர் டெலிவரியில் வெளிப்படை தன்மையை நிலைநிறுத்த ஓடிபி அடிப்படையில் 90% டெலிவரி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. அதே போல 5 கிலோ எடை கொண்ட மினி டெலிவரி விநியோகம் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு சராசரியாக 70 ,000 என இருந்து , போருக்கு பின்னர் அது ஒரு நாளைக்கு 90, 000 என அதிகரித்து இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications