இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோமோட்டோகார்ப் 2020 லாக்டவுன் அறிவிப்பின் போது உற்பத்தி பணிகளை முழுமையாகச் செய்ய முடியாமல் தவித்தது. குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவிய காரணத்தால் தளர்வுகள் அளிக்கப்பட்டும் முழுமையான பணிகளைச் செய்ய முடியாமல் தவித்தது.
இந்நிலையில் தற்போது 2வது கொரோனா அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்கள் தளர்வுகள் உடன் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்தது வருகிறது.
ஹீரோமோட்டோ கார்ப் முடிவு
இந்தச் சூழ்நிலையில் 2வது கொரோனா அலையில் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் தடைப்பெற்று வர்த்தகம் பாதிப்பு அடையக் கூடாது என்பதை உணர்ந்த நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் சுமார் 80,000 ஊழியர்களுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
இந்தியாவில் இன்போசிஸ், டாடா, ரிலையன்ஸ், டிவிஎஸ் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான கொரோனா தடுப்பு மருந்துக்கான செலவுகளை நிறுவனமே ஏற்றுக்கொண்டு இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்து அளித்து வருகிறது.
80,000 ஊழியர்களுக்குத் தடுப்பு மருந்து
இந்த வரிசையில் தற்போது ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் அதன் கிளை நிறுவனத்தில் இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டுமே இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடிவு செய்துள்ளது. ஹீரோமோட்டோ கார்ப்-ன் இந்த நடவடிக்கையின் மூலம் இந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 80,000 பேர் கொரோனா தடுப்பு மருந்து பெற உள்ளனர்.
ஹீரோமோட்டோ கார்ப் கிளை நிறுவனங்கள்
ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தைப் போலவே இதன் கிளை நிறுவனங்களான ஹீரோ பின்கார்ப், ஹீரோ பியூச்சர் எனர்ஜீஸ், ராக்மேன் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ எலக்ட்ரோநிக்ஸ் மற்றும் ஏஜி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன ஊழியர்களுக்கும் அரசு விதிமுறையின் படி 45 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications