இந்தியாவில் வேலைக்கு செல்லும் மக்களில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வேலைக்கு செல்பவர்களில் 86 % பேர் தாங்கள் போராடுகிறோம் அல்லது துன்பப்படுகிறோம் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.
Gallup என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பணியாளர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் ஒரு சிக்கலான மனநிலையில் இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 14 % ஊழியர்கள் மட்டுமே தாங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். மற்ற அனைவருமே அதாவது 86% பேர் தாங்கள் போராடுவதாகவோ அல்லது துன்பப்படுவதாகவோ தெரிவித்துள்ளனர்.
Gallup நிறுவனம் நடத்திய ஆய்வில் ஊழியர்களின் பதிலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 1.செழித்து வளர்கிறோம்(thriving), 2. போராடுகிறோம் (struggling) 3. துன்பப்படுகிறோம் (suffering).
தங்களுடைய தற்போதைய வாழ்க்கை நிலையை 7 அல்லது அதற்கு மேல் மதிப்பீடு செய்தவர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர்களும் வளர்ந்து வருகிறோம் என்ற வகையில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மறுபுறம் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கை நிலைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்கள் மன அழுத்தம் மற்றும் நிதி சார்ந்த கவலைகளால் சூழப்பட்டவர்கள் போராடுகிறார்கள் அல்லது துன்பப்படுகிறார்கள் என்ற வகைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை வேலைக்கு செல்லும் பெரும்பாலான இந்தியர்களின் மனநிலையை ஓரளவு வெளிப்படுத்தி இருக்கிறது என்று கூறவேண்டும். சர்வதேச அளவில் வளர்ந்து வருவதாக நினைக்கக்கூடிய மனநிலையில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் குறைந்துள்ளது என இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 14 % பேர் மட்டுமே தாங்கள் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவிலான சராசரியை விட 19 புள்ளிகள் குறைவாகும்.
தெற்காசிய நாடுகளிலேயே நேபாளத்தை சேர்ந்த பணியாளர்களில் 22 % தாங்கள் வளர்ந்து வருவதாக கூறியுள்ளனர். இதில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கே 14 சதவீதம் பேர் வளர்ச்சி அடைந்து வருவதாக பாசிட்டிவான பதிலை அளித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 35% இந்தியர்கள் தாங்கள் தினமும் கோபப்படுவதாக தெரிவித்துள்ளனர் . தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் இது உயர்ந்த விகிதத்தில் இருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், 32 % இந்தியர்கள் தாங்கள் அன்றாடம் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். வளர்ச்சி குறைவாக இருக்கிறது, அதிக அளவில் கோபம் இருக்கிறது, அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது என பல்வேறு சவால்கள் இருந்தாலும் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபாட்டுடன் தங்கள் வேலைகளை செய்வது 32 % ஆக உள்ளது இது உலக சராசரியான 23 % ஐ விட அதிகம்.
பல இந்திய ஊழியர்கள் கணிசமான சவால்களை எதிர் கொண்டாலும் வேலை என்று வரும்போது அவர்கள் அதில் ஈடுபாடுடன் இருக்கின்றனர் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications