இந்திய மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்புக்கான எதிர்காலம், வர்த்தக வாய்ப்புகள், குழந்தைகளுக்கான சிறப்பான கல்வி மற்றும் எதிர்காலம் என பல காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெறுகிறார்கள். இப்படி இந்திய குடியுரிமையை வேண்டாமென விடுத்து நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஜூன் மாதம் வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் படி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் சுமார் 87,026 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதன் மூலம் 2011 முதல் இந்திய குடியுரிமை விடுத்தோர் எண்ணிக்கை 17.50 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை மக்களவையில் 2022ல் 2,25,620 இந்தியர்களும், 2021ல் 1,63,370 பேரும், 2020ல் 85,256 பேரும், 2019ல் 1,44,017 பேரும், 2018ல் 1,34,538, 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2015 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2014 ஆம் ஆண்டில் 1,29,328 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1,31,405, 2012 ஆம் ஆண்டில் 1,20,923 பேரும், 2011 ஆம் ஆண்டில் 1,22,819 இந்தியர்களும் தங்களுடைய இந்திய குடியுரிமையை விடுத்துள்ளணர் என தெரிவித்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய வேலைவாய்ப்புகள் ஆராயும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. இதனால் இந்திய மக்கள் தனிப்பட்ட வசதிக்காகவும், விருப்பத்திற்காகவும் வெளிநாட்டு குடியுரிமையை எடுத்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
இந்தியர்கள் அமெரிக்கக் கனவைத் தொடர்ந்து துரத்தி வரும் காரணத்தால் சுமார் 7,88,284 பேர் 2021 ஆம் ஆண்டு வரையில் தங்களுடைய இந்திய குடியுரிமையைத் துறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை தொடர்ந்து 23,533 இந்தியர்கள் ஆஸ்திரேலியா-விலும், 21,597 பேர் கனடாவிலும், 14,637 பேர் இங்கிலாந்து நாட்டிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து இத்தாலி (5,986), நியூசிலாந்து (2,643), சிங்கப்பூர் (2,516), ஜெர்மனி (2,381), நெதர்லாந்து (2,187), சுவீடன் (1,841) மற்றும் ஸ்பெயின் (1,595) ஆகிய நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
2020 முதல் இந்தியர்கள் அதிக மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குடியுரிமை பெற்றுள்ளனர். சுமார் 40 லட்சம் பேர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர், 35 லட்சம் பேர் UAE நாட்டிலும், 25 லட்சம் பேர் சவதி அரேபியாவிலும் வாழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications