மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையும் இந்த ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 2026 ஜனவரி முதல் 8வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வர உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி 16ம் தேதியன்று, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகளை மறுஆய்வு செய்வதற்காக 8வது சம்பள கமிஷனை அமைக்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 8வது சம்பள கமிஷனுக்கான விதிமுறைகளுக்கான பரிந்துரைகளை NC-JCM பணியாளர் தரப்பு சமர்ப்பித்துள்ளது. அதில், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.

பணியாளர் தரப்பு பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது, சமமான ஊதியம் மற்றும் மேம்பட்ட தொழில் முன்னேற்றத்திற்காக குறைந்த ஊதிய அளவுகளை ஒருங்கிணைப்பதாகும். அதாவது லெவல் 1 மற்றும் லெவல் 2, லெவல் 3 மற்றும் லெவல் 4, லெவல் 5 மற்றும் லெவல் 6 என மூன்று பிரிவுகளாக இணைக்க வேண்டும். ஊதிய முன்னேற்றத்தில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்து தெளிவான சம்பள கட்டமைப்பை நிறுவுவதே இந்த இணைப்பின் முக்கிய நோக்கமாகும். உதாரணமாக, லெவல் 1 பணியாளர் தற்போது அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறுகிறார், லெவல் 2 பணியாளர் ரூ.19,900 பெறுகிறார். லெவல் 1 மற்றும் லெவல் 2 லெவல்களை ஒன்றாக இணைத்தால், லெவல் 1 பணியாளருக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.
தற்போது ஊதிய அளவுகோல் அமைப்பு, லெவல் 1 முதல் லெவல் 18 வரை 18 நிலைகளை கொண்டுள்ளது. அடுத்து, அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் ஒருங்கிணைப்பதற்கு பணியாளர் தரப்பு ஆதரிக்கிறது. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது பணவீக்கத்தின் விளைவுகளை தணிப்பதற்கும், வீட்டுக்கு செல்லும் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும்.
8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு முன், பரிந்துரைகளை மறுஆய்வு செய்ய ஒரு நிலைக்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஊழியர்கள் தரப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பணியாளர் தரப்பு பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்கள், பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நிவாரணத்தை வழங்கவும், கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications