8ஆவது சம்பள கமிஷன் வெளியிடப்போகும் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்த அறிவிப்புக்காக தான் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நியாயப்படி கடந்த ஜனவரி மாதம் முதலே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் உயர்வும் கிடைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசு சம்பள கமிஷனையே கடந்த ஆண்டில் தான் அமைத்தது. சம்பள கமிஷன் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை முடித்துவிட்டு ஒவ்வொரு மாநில அரசிடமும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையே அரசு ஊழியர் சங்கங்கள், ஓய்வூதிய சங்கங்கள் சார்பாக சம்பள கமிஷனிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவின் பிரதான ஓய்வூதியதாரர் சங்கமான பாரத் பென்ஷன் சமாஜ் அமைப்பு 8ஆவது சம்பள கமிஷனிடம் தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 69,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். அதே போல குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 45,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விலைவாசி உயர்வு, வாழ்க்கை செலவினங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என கூறியுள்ளனர். செலவுகள் கூடி விட்டன, மருத்துவ செலவுகள் அதிகரித்து விட்டன அதற்கேற்ப பென்ஷன் தொகையும் உயர்த்தப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.மேலும் ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை காலாண்டுக்கு ஒருமுறை என நான்கு முறையாக மாற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
8ஆவது சம்பள கமிஷன், ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகமாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். முந்தைய 7ஆவது சம்பள கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள விலைவாசி அடிப்படையில் இதனை 3.83ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். அப்படி செய்தால் தற்போதுள்ள குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான 9,000 ரூபாய் 45,000 ரூபாயாக உயரும். அதே போல மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 69,000 ரூபாயாக அதிகரிக்கும்.
8ஆவது சம்பள கமிஷன் தற்போது ஆலோசனைகளை தான் நடத்தி வருகிறது. இதன் பின்னர் விலைவாசி ,அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ஆகியவற்றை கொண்டு ஃபிட்மென்ட் ஃபேக்டரை அறிவிக்கும். இந்த பரிந்துரையை அரசு ஏற்கலாம் அல்லது நிராகரித்து திரும்ப அனுப்பலாம். பின்னர் சம்பள கமிஷன் மீண்டும் ஒரு பரிந்துரையை வழங்கும். மொத்தமாக 18 மாத கால அவகாசம் சம்பள கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் 2028 ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சம்பளமும் ஓய்வூதியமும் வந்துவிடும். தடைபட்ட இந்த 2 ஆண்டுகளுக்கான தொகையும் கணக்கிடப்பட்டு அரியர் பணமாக வழங்கப்பட்டுவிடும். எனவே அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறும் நபர்கள் சம்பள உயர்வு தள்ளிபோகிறதே என கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் சம்பள கமிஷன் தள்ளி போனாலும் அந்த பணம் மொத்த தொகையாக வந்து சேர்ந்துவிடும்.


Click it and Unblock the Notifications

