8-வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் 8-வது ஊதிய குழு கண்டிப்பாக அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இதே விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடியும் உறுதிப்படுத்தி இருந்தார்.
மார்ச் 19-ஆம் தேதியான புதன்கிழமை அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது ஊதியக் குழுவை அமைப்பது 36 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களின் குடும்பங்கள், பாதுகாப்பு பணியாளர்கள் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார், மத்திய அரசு சிவில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தோராயமான எண்ணிக்கை மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி 36.57 லட்சத்தை எட்டியுள்ளது. அதேபோல சிவில் சர்வீஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் தோராயமான எண்ணிக்கை டிசம்பர் 31 நிலவரப்படி 33.91 லட்சம் ஆக உள்ளது.

8-வது ஊதிய குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தற்போது அதற்கான டெர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸ் (TOR) என்று சொல்லப்படுகிற விதிமுறைகள் மற்றும் குறிப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது அதாவது ஊதியக்குழு என்பது எந்த அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை அடங்கியதுதான் இந்த TOR.
அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும்போது அது எதன் அடிப்படையில் இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்காக உருவாக்கப்படும் ஆவணம்.
அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து பணவீக்கத்திற்கு ஏற்ப பரிந்துரைகளை வழங்குவதற்காக தான் இந்த குழு. குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசே அமைக்கும் குழு தான் இந்த சம்பள கமிஷன். இந்த குழு முக்கியமாக மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களுடைய சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக 10 வருடங்களுக்கு ஒரு முறை உருவாக்கப்படும். ஏழாவது ஊதிய குழு 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது எட்டாவது ஊதிய குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படும் என்ற தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் இடையே மிகுந்த நம்பிக்கையை மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. அரசு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications