இந்தியாவில் பெரும்பாலான வெளிநாட்டு நாட்டு வர்த்தகத்திற்கு டாலர் மற்றும் யூரோவில் தான் செய்யப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போருக்கு பின்பு ரஷ்யா இந்தியா மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா தனது இறக்குமதிக்கு டாலர் / யூரோக்கு பதிலாக ரூபாயில் பேமெண்ட் பெறத் தயார் என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி சர்வதேச நாடுகளின் தடைக்கு எந்த விதத்திலும் மீறாத கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குப் பிறகு, அமெரிக்க டாலர், யூரோ உட்பட அனைத்து வெளிநாட்டு நாணயங்களுக்குப் பதிலாக ரூபாய் நாணயத்தில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பேமெண்ட் செய்வதை எளிதாக்க இரண்டு இந்திய வங்கிகளில் ஒன்பது சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டு உள்ளது.

ரஷ்ய வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் ரூபாய் வாயிலான வெளிநாட்டு வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்த பிறகு, ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank மற்றும் இரண்டாவது பெரிய வங்கியான VTB வங்கி ஆகியவை தான் வோஸ்ட்ரோ கணக்குகளை ஒப்புதலைப் பெற்ற முதல் வெளிநாட்டு வங்கிகளாகும்.

Gazprom வங்கி
இதேபோல் மற்றொரு ரஷ்ய வங்கியான Gazprom இந்தியாவில் அதன் வங்கி கிளைகள் இல்லை என்றாலும் கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட யூகோ வங்கியிலும் வோஸ்ட்ரோ கணக்கைத் துவங்கியுள்ளது. இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பேமெண்ட் செய்ய ஒன்பது வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

9 வோஸ்ட்ரோ கணக்குகள்
இதில் யூகோ வங்கியில் ஒன்று, Sberbank இல் ஒன்று, VTB இல் ஒன்று மற்றும் இன்டஸ்இந்த் வங்கியில் 6 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, இந்த 6ம் வெவ்வேறு ரஷ்ய வங்கிகளுடையது என்று வர்த்தகச் செயலாளர் சுனில் பார்த்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியா - ரஷ்யா
சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் திறப்பதற்கு முக்கியமான காரணம் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்திற்கு ரூபாயில் பணம் செலுத்துவதற்கான தளத்தை அளிக்கிறது. இதன் மூலம் இந்திய நாணயத்தில் எல்லை தாண்டிய வர்த்தகத்தைச் செயல்படுத்த முடியும்.

அரசுப் பத்திரங்கள்
இப்புதிய ஏற்பாட்டை வர்த்தகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தச் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகளில் இந்திய அரசுப் பத்திரங்களில் உபரி இருப்பை முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. யூகோ வங்கி ஏற்கனவே ஈரானில் வோஸ்ட்ரோ கணக்கு அடிப்படையிலான வசதியைக் கொண்டுள்ளது.

தனியார் ரஷ்ய வங்கி
Gazprombank ஒரு தனியார் ரஷ்ய வங்கியாக இருந்தாலும் சொத்து அளவுகளின் அடிப்படையில் ரஷ்ய நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாகும். ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும், வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகம் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகளை ரூபாயில் ஏற்க கேட்டுக் கொண்டது.

கச்சா எண்ணெய்
ரஷ்யா அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு ஒரு நாளுக்கு 946,000 பேரல் கச்சா எண்ணெய் சப்ளை செய்ததுள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளைத் தாண்டி, ரஷ்யா இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக ரஷ்யா இந்திய கச்சா எண்ணெய் சப்ளையர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக எரிசக்தி சரக்கு டிராக்கர் நிறுவனமான Vortexa தெரிவித்துள்ளது.