சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் வொர்க் ஃபிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை உலகம் முழுவதும் அமலுக்கு வந்தது. கொரோனா பெருந்தொற்று முடிந்த பிறகு நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என கூறுகின்றன. ஆனால் ஊழியர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாமா அல்லது அலுவலகத்துக்கு தான் வர வேண்டுமா என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கேபிஎம்ஜி என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு கன்சல்டன்சி நிறுவனம் ஆகும். இது இந்தியாவை சேர்ந்த 125 தலைமை செயல் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பவர்கள். இதன்படி இந்தியாவை சேர்ந்த 91% தலைமை செயல் அதிகாரிகள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்க தயாராக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுவே சர்வதேச அளவில் 87 சதவீத தலைமை செயல் அதிகாரிகள் நேரடியாக நாள்தோறும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உலக அளவில் 83 சதவீத தலைமை செயல் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக அலுவலகத்திற்கு வந்து பழைய நடைமுறைப்படி பணிபுரிவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவில் 78% தலைமை செயல் அதிகாரிகள் அனைத்து ஊழியர்களும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக அலுவலகத்திற்கு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறது.
மேலும் இந்தியாவை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் தற்போது எப்படி நாம் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு முதலீடு செய்கிறோமோ அதற்கு நிகராக ஊழியர்கள் திறன்களை மேம்படுத்துவதற்கும் முதலீடு செய்ய வேண்டும் என 50% பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எனவே பெரும்பாலான உயரதிகாரிகள் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர், தினமும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிபவர்களுக்கு கூடுதலாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் ஊக்க தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதும் இதில் தெரிய வருகிறது. ஏனெனில் அலுவலகம் வந்து பணிபுரியும் போது ஊழியர்களின் செயல் திறனும் புதுமையாக சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறதாம்.
Written by: Devika


Click it and Unblock the Notifications