சென்னை: இந்தியாவில் பல முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களும் இருக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் 94 சதவீத ஊழியர்கள் 2024-ஆம் ஆண்டில் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. சிந்தித்துப் பாருங்கள்.. 94 சதவீத நபர்களுக்கு மாற்று வேலை தேவைப்படுகிறது என்றால், இனிவரும் நாட்களில் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் இந்தியா, 'தி எக்ஸ்பெக்டேஷன் கேப்' என்ற தலைப்பில் அதன் "டேலண்ட் ட்ரெண்ட்ஸ் 2024" (Talent Trends 2024) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது சுமார் 37 நாடுகளில் உள்ள சுமார் 50,000 திறமையான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவிலிருந்து 3,000க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.

இந்தியாவில் உள்ள 34 சதவீத நிறுவனங்கள், பணியிடங்களுக்கு தகுந்த திறமையான ஊழியர்களைக் கண்டறிவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், கிட்டத்தட்ட தற்போது பணியாற்றும் நபர்களில் மூன்றில் ஒருவரைத் தக்க வைக்க நிறுவனங்கள் போராடுவதாகவும் அறிக்கை கூறியுள்ளது. வேலை தேடுவதில் உள்ள தீவிர போட்டியை இந்தப் போக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகளவில், 28 சதவீத நிறுவனங்கள் இதே போன்று ஊழியர்களை தக்க வைப்பதில் சவால்களை எதிர்கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்திய நிறுவனங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 47 சதவீத ஊழியர்கள் பணியிடத்தில் பாகுபாடு (discrimination) இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது ஆசிய பசிபிக் பிராந்திய சராசரியான 31 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், 45 சதவீத பணியாளர்கள் இன்னும் இதுபோன்ற சம்பவங்களை முறையாக நிறுவன அதிகாரிகளிடம் புகாரளிப்பதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.
26 சதவீத நிறுவனங்கள் திறமையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. அதே சமயம் 25 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வேகமான வளர்ச்சியும் திறமையான தொழில் வல்லுநர்களுக்கான கடுமையான போட்டியை உருவாக்குகின்றன. திறமையான தொழில் வல்லுநர்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவதோடு, அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக நெகிழ்வான வேலைகளையும் (Flexible Work) நிறுவனங்கள் வழங்குகின்றன.
சுகாதாரத் துறையிலும், பணியாளர் தேடும் பணியில் சவால்கள் இருக்கின்றன. 31 சதவீத நிறுவனங்கள் தகுதியான மருத்துவ பணியாளர்களைக் கண்டறிவதில் சிரமப்படுகின்றன, மேலும் 30 சதவீதம் பேர் பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு அதிகரிப்பதாலும், சுகாதார சேவைகள் விரிவடைவதாலும், இந்த துறையில் சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் வேகமாக விற்பனை ஆகும் நுகர்பொருள் துறை (FMCG) பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. 54 சதவீத நிறுவனங்கள் தங்களது திறமையான பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படுவதாகக் கூறுகின்றன. இதற்குக் காரணமாக, இ-காமெர்ஸ் வளர்ச்சியும், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களும் தான் என்று கூறப்படுகின்றன.
முடிவாக, இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கும் வேலை வழங்குபவர்களுக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருந்தாலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கும் திறமையானவர்களுக்கு இந்த மாற்றம் நிறைய வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications