உலகம் முழுவதுமே தற்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்து தான் அனைவரும் பேசி வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் கால் பதிக்க தொடங்கிவிட்டது ஏஐ. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துவிட்டது.
ஐடி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன வேலைகளில் ஏஐ பயன்பாட்டை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் மற்ற நிறுவனங்களுக்கான தயாரிப்புகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து வருகின்றன. ஏஐ வருகை படிப்படியாக மனிதர்கள் வேலையை பறிக்க தொடங்கிவிட்டது. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலைகளை கூட சில நிமிடங்களிலேயே ஏஐ முடித்து விடுகிறது என்றெல்லாம் நிறுவனங்களின் தலைவர்கள் ஏஐ குறித்த புகழை பாடுகின்றனர்.

ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது என்பது அவ்வப்போது அவர்கள் மூலமாகவே தெரிய வந்துவிடுகிறது. அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கீர்த்தி வாசன் ஏஐ குறித்து எழுதி இருக்கக்கூடிய ஒரு கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சி ஒரு அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது என தெரிவித்திருக்கும் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் இது நிறுவனங்கள் சிந்திக்கும் மற்றும் முடிவுகளை எடுக்கும் விதத்தை மாற்றுகிறது என கூறியிருக்கிறார்.
மகத்தான ஆற்றல் இருந்த போதிலும் 95% நிறுவன ஏஐ பைலட்டுகள் எதிர்பார்த்த செயல் திறனை வெளிக்காட்ட தவறிவிட்டன எனக் குறிப்பிடுகிறார். ஏஐ-இன் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு ஏஐ-யும் மனிதர்களின் திறமையும் எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை நிறுவனங்கள் சரியாக திட்டமிட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் முழுமையான ஆற்றலை நாம் சரியாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன என சுட்டிக்காட்டுகிறார். மனிதர்கள் தலையீட்டுடன் தொடர்ந்து ஏஐ செயல்பாடுகளை நாம் மேம்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டில் ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சி அடையும் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என கூறியுள்ளார். ஆனால் அது செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்றால் சரியான திட்டமிடலுடன் இந்த நுட்பத்தை அணுக வேண்டும் என்கிறார். இனி மனிதர்கள் மற்றும் இயந்திரங்கள் இணைந்து வேலை செய்ய போகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய வகையிலான நிறுவன கட்டமைப்புகள் நாம் வேலை செய்யும் விதத்தையும் , முடிவு எடுக்கும் திறன்களையும் அதன் மூலம் கிடைக்கும் ரிசல்ட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என கூறி இருக்கிறார். சரியான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம் இதற்கு ஏற்ப நிறுவனங்களும் நிறுவன தலைமைகளும் திட்டமிட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications