பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் வாடகை கார் ஓட்டுநர்களின் நிலை குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. வாடகை வாகனங்களின் ஓட்டுனர்கள் எப்படி சவாலான வேலை சூழல்களை எதிர்கொண்டு இருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
ஐஐஎம் பட்டதாரியும், கேம்ப் டெய்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மிலிந்த் சந்த்வானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாடகை கார் ஒன்றில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கார் ஓட்டுவதையும் தன்னுடைய கார் ஓட்டுனர் அருகில் ஓய்வெடுப்பதையும் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு வெளியூருக்கு சென்று விட்டு பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

அதிகாலை 3 மணி அளவில் அவர் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக வாடகைக் கார் புக் செய்துள்ளார். அப்பொழுது தனக்கு வந்த வாடகை காரின் ஓட்டுநர் மிகுந்த தூக்க கலக்கத்தில் இருந்ததையும் அவரால் சரியாக வாகனத்தை ஓட்ட முடியாமல் தவித்ததையும் அவர் கண்டிருக்கிறார். அவர் வழியில் இறங்கி டீ குடித்து சில நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்த போதும் அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
இதனை அடுத்து சந்தவானி நான் காரை ஓட்டுகிறேன் என கூறினாராம், இதனை எடுத்து அந்த ஓட்டுநர் அவரிடம் காரின் சாவியை கொடுத்துவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். இந்த வீடியோவை தான் சந்த்வானி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
தன்னுடைய இந்த அனுபவம் குறித்து எழுதி இருக்கும் சந்த்வானி "இந்த பயணம் எனக்கு பல விஷயங்களை கற்றுத் தந்தது ,அவர் என்னை நம்பி கார் சாவியை கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் இத்தனை கடினமான சூழலில் இத்தனை சவால்களுக்கு மத்தியில் உழைக்கிறார் என்பதையும் நான் கண்டேன்" என தெரிவித்துள்ளார்.
இறுதியில் அவருக்கு 100 ரூபாய் டிப்ஸ் கொடுத்ததாக அவர் பதிவு செய்துள்ளார். மேலும் வாழ்க்கை என்பது எதிர்பாராத பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது. அன்பாக இருங்கள், கருணை காட்டுங்கள் எனக் கூறியுள்ள அவர் அனைவரும் கட்டாயம் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு சுமார் 7.5 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது பலரும் இதுதான் வாடகை கார் ஓட்டுநர்களின் உண்மையான நிலை என தெரிவித்துள்ளனர். பலரும் சந்த்வானியின் கனிவான செயலை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications