இந்தியாவின் பழங்கால மன்னர்கள் தங்கள் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நகைகள், நிலம், பொருள் என பல்வேறு வகையான பரிசுகளையும் இதற்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட அரசர்கள் வழங்கியுள்ளனர். அதே போல தற்போதும் ஒரு தொழிலதிபர் தனது கனவு வீட்டை கட்டிய காண்ட்ராக்டருக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக் கடிகாரத்தை பரிசாக வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
NDTV-யின் அறிக்கையின்படி, குர்திப் தேவ் பாத் என்ற தொழிலதிர் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள பரந்து விரிந்த 9 ஏக்கர் தோட்டத்தில் தனது வீட்டைக் கட்டிய ராஜிந்தர் சிங் ரூப்ரா என்ற கான்ட்ராக்டரின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

ராஜிந்தர் சிங் ரூப்ராவுக்கு வழங்கப்பட்ட ரோலக்ஸ் ஆயிஸ்டர் பெர்பெச்சுவல் ஸ்கை-டிவெல்லர் மாடல் கடிகாரம், பாரம்பரிய ராஜஸ்தானி கோட்டையைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.18 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்திப் தேவ் பாத்தின் வீடு நவீன கால கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. வீட்டின் நுழைவாயிலில் இரண்டு சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமையான தோட்டங்களுக்கு இடையே ஒரு பிரமாண்டமான நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்ட மொத்தமாக 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஒவ்வொரு நாளும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
"இது வெறும் வீடு அல்ல, இது ஒரு பிரமாண்டத்தின் வடிவமைப்பு, கவனமாக வடிவமைக்கப்பட்டு, காலத்தால் அழியாத நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது
காலக்கெடுவுக்குள் இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு, வீட்டின் நேர்த்தியான வடிவமைப்பு அனைத்தும் நான் கேட்டதை விட அதிகமாக உள்ளது. வீட்டின் வடிவமைப்பு முழுவதும் என் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது என்று குர்திப் தேவ் பாத் வீட்டின் வடிவமைப்பு குறித்து பாராட்டியுள்ளார். பஞ்சாபின் ஷாகோட்டைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் ரூப்ரா, இவ்வளவு பெரிய சொத்தில் பணிபுரிவது சவாலானதாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
தனது பணியை சிறப்பாக செய்து முடித்த காண்ட்ராக்டருக்கு கிடைத்த பரிசு, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சொன்ன நேரத்திற்குள் வீட்டைக் கட்டி டெலிவரி செய்ததற்காக, அந்த வீட்டின் உரிமையாளர் ரூ.18 லட்ச ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications