பாங்காக்: தாய்லாந்தை சேர்ந்த 30 வயதான இளம் ஊழியர் மேலாளர் மருத்துவ விடுப்பு வழங்காத காரணத்தால் இறந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்காகிற்கு தெற்கே உள்ள சமுத் பிரகான் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மே என்ற பெயர் கொண்ட 30 வயது இளம் பெண் மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய டெல்டா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பெருங்குடலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இவர் செப்டம்பர் 5 முதல் 9ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்த சமயத்தில் அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூடுதலாக தனக்கு மருத்துவ விடுப்பு வேண்டும் என தன்னுடைய மேலாளரிடம் இவர் கேட்டுள்ளார்.
தன்னுடைய உடல்நிலை மோசமடைந்திருப்பதால் விடுப்பு வேண்டும் என அவர் கோரியுள்ளார். ஆனால் அவரது மேலாளர் இந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு விடுமுறை வழங்கவில்லை. மேலும் அவர் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.
தன்னுடைய வேலை பறிபோய் விடுமோ என அச்சமடைந்த அவர், அடுத்த நாளே வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பணிக்கு வந்த 20 நிமிடங்களிலேயே திடீரென அவர் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு அவசர கால அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாளே அவர் உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் தாய்லாந்து மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நிறுவனங்கள் குறிப்பாக இது போன்ற உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேவின் மறைவு தங்கள் நிறுவனத்திற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளது.
ஊழியர்களே எங்கள் நிறுவன வெற்றிக்கு அடித்தளமாக இருப்பவர்கள் என தெரிவித்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மே அவர்களின் மறைவு எங்களை நிலைகுலைய செய்துள்ளது என கூறியுள்ளது. மேலும் மேலாளர் விடுப்பு தராமல் விட்டதே அவரது இறப்புக்கு காரணமா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தான் இந்தியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தொடர் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உயிரிழந்தார். தற்போது தாய்லாந்திலும் இப்படி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications