அசாதாரண சட்டப்போராட்டத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இந்திய ரயில்வேயின் மதிப்புமிக்க ரயிலின் உரிமையாளராக சிறிது நேரம் மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த விவசாயி கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரண் சிங். இவரது சட்டப்போராட்டம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்.
2007ம் ஆண்டு இந்தியன் ரயில்வே பஞ்சாப் மாநிலம் லூதியானா-சண்டிகர் இடையே ரயில் பாதை அமைப்பதற்காக கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரண் சிங் உள்பட பல விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்தை வழங்கியதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 லட்சம் சம்பூரண் சிங்குக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது.

அதேசமயம், பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயிகள் இதே போன்ற நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளனர். இதை அறிந்த சம்பூரண் சிங், ரயில்வே தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக உணர்ந்த சம்பூரண் சிங், அதிக இழப்பீடு தொகை கோரி 2012ல் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. முதலில் இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.50 லட்சமாகவும், பின்னர் ஏக்கருக்கு ரூ.1.7 கோடியாகவும் உயர்த்தியது. நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், வடக்கு ரயில்வே சம்பூரண் சிங்குக்கு முழு தொகையையும் வழங்க தவறி விட்டது. 2015ம் ஆண்டில் ரயில்வேயிடம் இருந்து ரூ.42 லட்சத்தை மட்டுமே பெற்றார். ரயில்வே எஞ்சிய ரூ.1.05 கோடியை வழங்கவில்லை.
நீதிமன்றத்தின் உத்தரவை இந்திய ரயில்வே பின்பற்ற தவறியதால் 2017ம் ஆண்டில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஜஸ்பால் வர்மா ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தார். பாக்கி நிலுவை தொகைக்கு இழப்பீடாக லூதியானா ரயில் நிலையத்தில் ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கூடுதலாக லூதியானா ரயில் நிலைய மாஸ்டர் அலுவலகமும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் சட்ட உத்தரவை தொடர்ந்து, சம்பூரண் சிங், தனது வழக்கறிஞருடன் லூதியானா ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலை அபராதமாக கைப்பற்றி, அதன் தற்காலிக உரிமையாளராக மாறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கின் தற்காலிக உரிமை இருந்தபோதிலும், ரயில் விரைவாக விடுவிக்கப்பட்டது. நீதிமன்ற அதிகாரியின் உதவியுடன் ஒரு பிரிவு பொறியாளர் சில நிமிடங்களில் இந்த விஷயத்தை தீர்த்து, அந்த ரயிலின் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதை உறுதி செய்தார். அதேசமயம் இந்த இழப்பீடு வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. சம்பூரண் சிங்கின் சட்ட நடவடிக்கைகள் இன்னும் தொடருகிறது.
பெரிய அரசு நிறுவனங்களுக்கு எதிரான இழப்பீட்டு கோரிக்கைகளை கையாளும்போது நில உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒரு ரயிலை சொந்தமாக வைத்திருப்பது பெரும்பாலான தனிநபர்களுக்கு கற்பனை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையாக இருந்தாலும், சம்பூரண் சிங் கதை ஒரு அரிய விதிவிலக்கான ஒன்று.


Click it and Unblock the Notifications