பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகத்தான் மெட்ரோ ரயில் சேவை என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெங்களூரு டிராபிக்: கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக அவர் பெங்களூருக்கு வருகை தந்திருந்தார். பெங்களூருவின் பிரதான பகுதிகளை ஐடி நிறுவனங்கள் நிறைந்து காணப்படும் எலக்ட்ரானிக் சிட்டி வரை இணைக்கும் மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவை லட்சக்கணக்கான மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

சிறுமி கடிதம்: இதனிடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு 5 வயது சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரை சேர்ந்த அபிரூப் சாட்டர்ஜி என்பவரின் மகள் ஆர்யா இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூர் வருகை அறிந்து ஒரு கடிதத்தை எழுதி இருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி: அபிரூப் சாட்டர்ஜி பதிவு செய்துள்ள அந்த கடிதத்தில் சாதாரண ஒரு தாளில் அந்த சிறுமி எழுதி இருக்கும் கடிதம் இடம்பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் நரேந்திர மோடி ஜி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது நான் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்கிறேன் அலுவலகத்திற்கு செல்பவர்களும் தாமதமாகவே செல்கிறார்கள் சாலைகள் மிக மோசமாக இருக்கின்றன தயவுசெய்து உதவுங்கள் நன்றி என அந்த சிறுமி அதில் எழுதியிருக்கிறார்.
தீராத பிரச்சினை: பிரதமரின் வருகை குறித்து அறிந்த என் மகள் போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்காக அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என குறிப்பிட்டு இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்சனை என்பது உலகம் அறிந்தது . அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் அவதி: இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெங்களூரு மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த வருகிறது . இந்த சூழலில் மோடியின் வருகை ஓட்டி இந்த சிறுமி எழுதி இருக்கும் கடிதம் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சிறுவர் சிறுமியர் மத்தியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. பலரும் இந்த சிறுமியின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications