ஐதராபாத்: உலகம் முழுவதுமே அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்கும் பலரும் தங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக புலம்புவதை பார்க்க முடிகிறது. நம்முடைய பணிச் சூழல்களும் சமூகம் தரும் அழுத்தங்களுமே இதற்கு காரணம்.
வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்ய முடியாமல் பலரும் தவிக்கின்றனர். இப்படி ஊழியர்கள் மன அழுத்தத்துடன் பணி புரிந்தால் நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும். எனவே ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக ஒரு புதிய அதிகாரியை வேலைக்கு நியமனம் செய்திருக்கிறது. இந்த அதிகாரி பேச மாட்டார் ,கோடிங் செய்ய மாட்டார், யார் யார் என்னென்ன வேலை செய்கிறார் என கண்காணிக்க மாட்டார், ஆனால் இந்த அதிகாரி அலுவலகத்திற்குள் வந்தாலே அனைவரின் மனதிலும் அவர்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் பொங்குகிறதாம்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹார்வெஸ்டட் ரோபோடிக்ஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு ராகுல் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. பயிர்களை காப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தான் தற்போது டென்வர் என பெயரிடப்பட்ட கோல்டன் ரிட்ரைவர் வகை நாயை தலைமை மகிழ்ச்சிய அதிகாரியாக (Chief Happiness officer) பணி நியமனம் செய்திருக்கின்றனர் .
இதனை தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ராகுல் எங்களுடைய புதிய அதிகாரியை பாருங்கள் இவர் பெயர் டென்வர், இவர் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் .இவர் கோடிங் செய்ய மாட்டார் ,எதை பற்றியும் கவலைப்பட மாட்டார், அலுவலகத்திற்கு வருவார் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வார் ,அனைவரையும் உற்சாகமாக வேலை செய்ய வைப்பார் என கூறியிருக்கிறார் .
இந்த கோல்டன் ரிட்ரைவரின் பணியே அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தானாம். இதனை இவர் திறம்பட செய்து வருகிறார் என ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து டென்வருக்கு சொந்தமாக லிங்குடின் பக்கத்திலும் டென்வர் கிளாவ்சன் என்ற பெயரில் ஒரு புரோஃபைலை உருவாக்கியுள்ளனர். டென்வர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது . பலரும் எங்களுடைய அலுவலகத்திலும் இதுபோல ஒரு மகிழ்ச்சி அதிகாரியை நியமித்தால் நன்றாக இருக்கும் என தங்களுடைய ஆதரவையும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹார்வெஸ்ட் ரோபோடிக்ஸின் முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு பயனர் இப்படி ஒரு அலுவலகத்தில் கண்டிப்பாக எவ்வளவு மணி நேரம் வேலை செய்தாலும் நமக்கு மன அழுத்தமே ஏற்படாது என தெரிவித்திருக்கிறார் . பலரும் அலுவலகங்கள் இதுபோல ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரியக்கூடிய சூழலுக்கு மாற வேண்டும் என தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications