சென்னை: இந்தியாவில் ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. மக்கள் இதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கின்றனர். நாங்கள் கூறும் செயலிகள் வாயிலாக முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் பல மடங்கு லாபத்தை பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி மோசடியாளர்கள் எளிதாக மக்களின் பணத்தை பறித்து செல்கின்றனர். இந்த பங்குச்சந்தை மோசடியில் அண்மையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் 76.5 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரியும் ஒரு மருத்துவர் யூடியூபில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்துள்ளார். இந்த லிங்கின் மூலம் அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்துள்ளார்.

அந்த குழுவில் பலரும் பங்குச்சந்தை சார்ந்த மற்றும் வர்த்தகம் சார்ந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர். நாள்தோறும் அதில் ஆன்லைன் வர்த்தகத்தின் அடிப்படைகள் குறித்து விவரிக்கப்படுமாம். எனவே இது ஒரு நம்பகமான குழு என அந்த மருத்துவர் நம்பிக்கை பெற்றுள்ளார்.
திவாகர் சிங் என்பவர் தான் இந்த குழுவை நிர்வகித்தாராம், அவர் குறுகிய கால மற்றும் நீண்டகால முதலீடுகளுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் ஐடியாக்கள் குறித்தும் தெரிவித்து வருவாராம். தானும் வர்த்தகம் செய்ய விரும்புவதாக இந்த மருத்துவர் திவாகர் சிங்கிடம் கூறியுள்ளார்.
அந்த மோசடி கும்பல் அவரை பங்கு வர்த்தகம் செய்யக் கூறி ஆசை வார்த்தைகளை காட்டி ஒரு ஆன்லைன் தளத்தில் கணக்கை தொடங்க செய்துள்ளது.மேலும் அந்த தளத்தில் சில பங்குகளையும் வாங்க பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியதன் அடிப்படையில் இவரும் ஒரு குறிப்பிட்ட தளத்தில் கணக்கினை தொடங்கி அவர்கள் கூறிய கணக்குகளுக்கு பணத்தினை அனுப்பி முதலீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் 76.5 லட்சம் ரூபாயை இந்த தளத்தில் முதலீடு செய்திருக்கிறார், கடந்த மாதம் அவர் அதிலிருந்து 50 லட்சம் ரூபாயை திரும்ப எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த பணத்தை எடுக்க முடியவில்லை . அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டு அந்த மருத்துவர் காவல்துறையினிடம் புகார் அளித்துள்ளார்.
அண்மைக்காலமாகவே சைபர் கிரைம் காவல்துறையினருக்கு இதுபோல பங்குச் சந்தை முதலீடு சார்ந்த மோசடி குறித்த புகார்கள் அதிகமாக வருகிறது. எனவே யாரும் இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வது , வாட்ஸ்அப் குழுவில் இணைவது அல்லது அங்கீகரிக்கப்படாத தளங்களில் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications