குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பம் முறைகேடாக அமெரிக்காவிற்குள் செல்வதற்கு ஒரு கோடி ரூபாய் செலுத்தி தற்போது மீண்டும் இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு முறைகேடாக குடியேறிய வெளிநாட்டவர்களை படிப்படியாக வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருந்த இந்தியர்கள் 104 பெயரை அமெரிக்க அரசு நாடு கடத்தியது .அமெரிக்கா அரசு தன்னுடைய ராணுவ விமானத்தின் மூலம் இவர்களை நேற்றைய தினம் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டது.

இவர்களில் 35 பேர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் , 33 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் , 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து மூவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இருவர் என மொத்தமாக 104 பேரை அமெரிக்கா தன்னுடைய ராணுவ விமானத்தில் அழைத்து வந்து புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரை இறக்கியது.
இவ்வாறு தாயகம் அழைத்துவரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில் தான் அமெரிக்காவிற்குள் நுழைந்தார்களாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் குஜராத்தில் இருந்து சென்ற 33 இந்தியர்களில் ஒரு குடும்பம் அமெரிக்காவிற்கு செல்வதற்காக 1 கோடி ரூபாயை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் அந்த குஜராத்தி குடும்பத்தினர் 1 கோடி ரூபாயை நாங்கள் செலவு செய்தோம் எங்களை ஏமாற்றி விட்டனர் என பேட்டி அளித்துள்ளனர். பொதுவாக இதுபோல அமெரிக்காவிற்குள் முறைகேடாக செல்ல முயன்றதாக கைது செய்யப்படுபவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மாநிலத்தவர்களாக தான் இருக்கின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவிற்கு முறைகேடாக செல்வதற்காக கனடாவிற்கு சென்று அங்கிருந்து எல்லை வழியே அமெரிக்காவிற்கு செல்வதற்காக காத்திருந்தபோது பனியில் உறைந்து இறந்தனர். அப்போதே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.
குஜராத்தில் குறிப்பிட சில பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய வீடு, நிலம், மனை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து கோடிக்கணக்கிலும் லட்ச கணக்கிலும் பணத்தை தந்து பலரிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சில குறிப்பிட்ட முகமைகள் இதுபோல அமெரிக்காவிற்கு முறைகேடாக இந்தியர்களை அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இவர்கள் கனடா அல்லது மெக்சிகோ நாட்டிற்கு விசிட்டிங் விசாவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் .இதனை அடுத்து ஒவ்வொரு ஏஜெண்டுகளிடமிருந்து இவர்கள் கைமாற்றப்படுவார்கள். பின்னர் அமெரிக்க மெக்சிகோ எல்லை அல்லது கனடா எல்லையில் விடுவிக்கப்படுவார்கள்.
அங்கிருந்து இவர்கள் எப்படியாவது அமெரிக்காவினுள் நுழைந்து விட வேண்டும். இவ்வாறு அமெரிக்காவினுள் நுழையும்போது பலரும் கைது செய்யப்படுகின்றனர் சில சமயங்களில் உயிரிழப்புகளும் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications