நொய்டா: நொய்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என செய்த விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லிங்குடின் தளத்தில் நொய்டாவை சேர்ந்த ஒரு கன்சல்டிங் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு டேட்டா அனலிஸ்ட் பொறுப்புக்கு ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்து பதிவு வெளியிட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டேட்டா அனலிஸ்ட் பணியில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களோடு சேர்ந்து பணி புரிய வேண்டும், உயர்தரமான டேட்டா அடிப்படையிலான தீர்வுகளை வழங்க வேண்டும், பல்வேறு வாடிக்கையாளர்களோடு கலந்துரையாடும் திறமை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன . மேலும் ஹிந்தி மொழியில் நன்கு எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகுதிகள் என்ற பிரிவின் கீழ் குறிப்பு என தனியாக வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தென்னிந்தியர்கள் இந்த வேலைக்கு தகுதியற்றவர்கள் அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான இந்த விளம்பர பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட நிறுவனத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது மோசமான செயல் என ஒரு பயனர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். பலரும் இந்த நிறுவனத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஒரு பயனர் ஹிந்தி எழுதி படிக்க தெரிய வேண்டும் என குறிப்பிடுவது சரி தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி எழுத படிக்கத் தெரியாது என எப்படி நீங்கள் முடிவு செய்யலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் ஹிந்தி மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர் . குறிப்பிட்ட சில மாநிலங்களை சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவருக்கு வேலைவாய்ப்பை மறுப்பது எந்த வகையில் நியாயமாகும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். வட இந்தியர்களுக்கு நிகராக ஹிந்தி மொழி பேசவும், எழுதவும் தெரிந்த பலர் தென்னிந்திய மாநிலங்களில் உள்ளனர் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications