திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நபர் தனி நபராக இந்தியாவிற்குள் 69,000 கிலோமீட்டர் கார் ஓட்டி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
திருவனந்தபுரம் அருவிக்கரா பகுதியை சேர்ந்தவர் தான் ஜிஎஸ் மணி குட்டன். இவர் அமெரிக்கர் ஒருவரின் சாதனையை முறியடுத்து தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவிற்குள் 69,207 கிலோமீட்டர் தொலைவினை தன்னுடைய காரில் தனியாக பயணம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவிற்கு உள்ளேயே 58,185 கிலோமீட்டர் தொலைவினை 121 நாட்களில் பயணம் செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருந்தார். தற்போது மணி குட்டன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மகேந்திரா எக்ஸ்யூவி 500 கார் மூலம் இவர் 22 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் 99 நாட்களில் 69,207 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணம் செய்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இவரது பயணம் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் அருவிக்கரா பகுதியில் தொடங்கிய இவரது பயணம் நவம்பர் 2023, நவம்பர் 19ஆம் தேதி முடிவடைந்தது. காரில் பயணம் செய்வது தனக்கு பிடித்தமானது என்றும் அதுவே தற்போது சாதனை படைக்க உதவி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தன்னுடைய தொழிலுக்குத் தேவையான பொருட்களை வேறு மாநிலங்களுக்கு சென்று வாங்கும்போது கூட தானே நேரடியாக காரை ஓட்டிச் சென்று பொருட்களை வாங்கி வந்து வைப்பேன் எனவும் இதன் மூலம் தன்னால் பல்வேறு புதிய இடங்களுக்கு செல்ல முடிகிறது பல்வேறு புதிய அனுபவங்களை பெற முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் தன்னுடைய பயணம் குறித்து பதிவு செய்ததை அடுத்து அவருடைய ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்தையும் கின்னஸ் அமைப்பு பதிவு செய்து முழுமையாக மதிப்பாய்வு செய்து தான் இந்த சாதனையை அறிவித்துள்ளது.
குஜராத்தில் கார் ஓட்டுவது தான் கடினமாக இருந்தது என கூறும் மணி குட்டன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான சாலைகளும் பாலங்களும் சேதம் அடைந்திருந்தன என தெரிவித்தார். இதன் காரணமாக தான் மாற்று வழியில் பயணம் செய்ய வேண்டி இருந்ததாகவும் ,இவை அனைத்தையும் தான் கின்னஸ் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கார் பழுதாகி நீண்ட நேரம் சாலையிலேயே நிற்க வேண்டிய சூழல்களும் உண்டாகின என அவர் கூறுகிறார்.
இந்த சவால்களை எல்லாம் கடந்து தான் இப்பொழுது சாதனையை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் .தனி ஒரு ஆளாக காரை ஓட்டிக்கொண்டு இத்தனை கிலோமீட்டர் பயணம் செய்வது என்பது பல்வேறு சிக்கல்கள் நிறைந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் சிக்கல்களை சவால்களாக எடுத்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை மட்டுமில்லாமல், இவரது பயணம் லண்டன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (London Book of World Records), இந்தியா வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (India's World Records) உள்ளிட்டவற்றிலும் இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications