டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. பொதுவாக மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை அமைக்கும்.
இந்த ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் பென்சன் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து அதனை விலைவாசிக்கு ஏற்ப மாற்றி அமைக்கும்.

தற்போது மீண்டும் மோடி அரசு மத்தியில் அமைந்திருக்கும் நிலையில் 8ஆவது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் , எட்டாவது ஊதியக்குழு சம்பந்தமான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான ஜேசிஎம் அமைப்பின் தேசிய கவுன்சில் செயலாளரான சிவகோபால் மிஸ்ரா எட்டாவது ஊதிய குழு அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த எட்டாவது ஊதிய குழுவானது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் படிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் தொகை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களின் ஊழியர்கள் சார்பாக சிவகோபால் மிஸ்ரா மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தார். அதில் கூடிய விரைவில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மத்திய அரசு 8ஆவது ஊதிய குழுவை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கிட்டதட்ட 1 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்தி அமைக்க வேண்டும் என காத்திருக்கின்றனர் என்று கடிதத்தில் கூறி இருந்தார்.
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தை விட கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பணவீக்கம் என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக அன்றாடம் நமது பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களின் விலையை ஆய்வு செய்யும் போது 2016 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 80 சதவீதம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விலைவாசி உயர்வுக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என மிஸ்ரா குறிப்பிட்டார். அகவிலைப் படியை மட்டுமே உயர்த்திக் கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை அவ்வப்போது ஆராய்ந்து மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
story written by: Devika


Click it and Unblock the Notifications