அண்மைக்காலமாக நாம் ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது நாம் ஆர்டர் செய்வது ஒன்றாகவும் நமக்கு டெலிவரி ஆவது ஒன்றாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வித்தியாசமான பொருட்களை பெறுபவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி விடுகின்றனர். அந்த வகையில் ஸ்விக்கியில் லைம் சோடா ஆர்டர் செய்தவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது டிரெண்டாகியுள்ளது.

ஆர்யன்ஷ் என்ற நபர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்விக்கி இப்படி ஒரு காலியான கிளாஸை எனக்கு அனுப்பி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி நான் ஆர்டர் செய்த லைம் சோடா மற்றொரு ஆர்டரில் வந்து சேர்ந்துவிடும் என நம்புகிறேன் என கிண்டலாக கூறியுள்ளார்.
அதில் தனக்கு வந்த அந்த காலி கிளாஸின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு ஸ்விக்கி நிறுவனம் எக்ஸ் தளத்திலேயே பதிலளித்துள்ளது. உங்களது ஆர்டர் ஐடியை எங்களுக்கு பகிர்ந்தால் நாங்கள் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என பார்க்கிறோம் என பதிவிட்டு இருந்தது.

பின்னர் ஆர்டர் ஐடியை ஸ்விக்கியிடம் தெரிவித்து ரூ.80ஐ திரும்ப பெற்றதாக தெரியவருகிறது.அவரது இந்த பதிவானது எக்ஸ பக்கத்தில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளை பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர். பலரும் இதில் பின்னூட்டங்களையும் பதிவு செய்துள்ளனர்.
ஒரு நபரோ அடிக்கிற வெயிலில் அதிலிருந்த சோடா ஆவியாகி இருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு நபரோ இது நீராவி வடிவத்தில் திரவத்தை அனுப்பி வைக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என கூறியுள்ளார்.
நேற்றைய தினம் இதே போல பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதி அமேசானில் ஒரு எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலரை ஆர்டர் செய்தனர். ஆனால் அவர்களுக்கு அத்துடன் சேர்ந்து ஒரு பாம்பும் பரிசாக வந்திருந்தது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்விக்கி ஆர்டரிலும் இப்படி சொதப்பல்கள் நடந்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications