இந்தியாவில் அண்மை காலமாக work life balance எனப்படும் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமன் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டுள்ளது. அதீத பணிச்சுமையால் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தது, ஆங்காங்கே ஊழியர்கள் தற்கொலை என்ற செய்தி ஆகியவையே இந்த கருத்து எழுவதற்கு காரணம்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தும் வகையிலும் ஊழியர்களுக்கு வேலை மற்றும் நேர அட்டவணைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் அலுவலக நேரம் முடிந்தாலும் வேலை செய்ய வேண்டும் என தன்னுடைய பாஸ் நிர்பந்தம் செய்ததால் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே என்னுடைய வேலையை விட்டுவிட்டேன் என ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

ரெடிட் என்ற தளத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய அனுபவங்களையும் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுவார்கள். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஸ்ரேயாஸ் என்ற நபர் தான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அந்த வேலையை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 7ஆம் தேதி வேலைக்கு சேர்ந்ததாகவும் தன்னுடைய உயர் அதிகாரியிடம் அன்றைய தினம் முதல் சந்திப்பு நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் நேரம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும், அலுவலக நேரம் தாண்டியும் வேலை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு கூடுதலாக அலுவலக நேரம் தாண்டி செய்யும் வேலைக்கு கூடுதல் ஊதியம் கிடைக்குமா என கேட்டதற்கு அந்த உயர் அதிகாரி இல்லை என தெரிவித்தாராம். அதுமட்டுமின்றி work life balance என்பதெல்லாம் வெளிநாட்டினருக்கு தான் செட் ஆகும் இந்தியாவில் அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது எனக் கூறினாராம்.
புத்தகம் படிப்பதற்கு, உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் வேண்டும் என இவர் கேட்டபோது அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது எனக் கூறினாராம். வேலை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது நான் புத்தகம் படிப்பேன் உடற்பயிற்சி செய்வேன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவேன் ஆனால் இந்த நிறுவனத்திற்காகவும் இந்த வேலைக்காகவும் அவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என என்னுடைய உயர் அதிகாரி என்னிடம் கூறினார்.
இப்படி ஒரு டாக்ஸிக்கான பணியிடத்தில் நம்மால் வேலை செய்ய முடியாது என முடிவெடுத்து நான் உடனடியாக என்னுடைய வேலையை விட்டு விட்டேன்" என அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு ரெட்டிட் தளத்தில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. ஸ்ரேயாஸின் முடிவுக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications