பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், ஐடி நகரம் என பல்வேறு புகழை பெற்று இருக்கிறது. பெங்களூரு என்ற உடன் எப்படி ஐடி அலுவலகங்கள் நினைவுக்கு வருகிறதோ அதே போல போக்குவரத்து நெரிசலும் நினைவுக்கு வந்துவிடும். சிலர் கிண்டலாக பெங்களூரை போக்குவரத்து நெரிசலின் தலைநகரம் என்று கூட கூறுகின்றனர். அந்த அளவிற்கு பெங்களூருவின் அனைத்து பகுதிகளிலும் எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பன உள்ளிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும். போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் போது தேர்வுக்கு படிப்பது , போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் போது அலுவலக மீட்டிங்கில் பங்கேற்பது, போர்ட்டர் செயலி மூலம் தன்னை தானே அலுவலகத்திற்கு பார்சலாக புக் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

அப்படி ஒரு தனித்துவமான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூரில் ஒரு நபர் யுனி சைக்கிள் (UNICYCLE ) எனப்படும் ஒற்றைச் சக்கரத்தில் மட்டுமே இயங்கக்கூடிய சைக்கிளில் செல்லும் வீடியோ பலரது பார்வையையும் பெற்றுள்ளது. பெங்களூருவின் அவுட்டர் ரிங் சாலையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அவுட்டர் ரிங் சாலை பெங்களூருவிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலை. இந்த சாலையை ஒருவர் யுனி சைக்கிளில் கடந்து செல்லக்கூடிய இந்த வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாக இருக்கிறது. ஒரு பையை முதுகில் மாட்டி கொண்டு தலையில் ஹெல்மெட் அணிந்திருக்கும் அந்த நபர் யுனி சைக்கிளில் கேஷுவலாக பயணம் செய்கிறார். போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் பேருந்துகள் மற்றும் கார்களை பின்னுக்கு தள்ளி அவர் வேகமாக அந்த பகுதியை கடந்து செல்கிறார்.
பெங்களூர் விஷுவல் சென்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெங்களூர் வாசிகள் இப்படித்தான் பயணம் செய்யப் போகிறார்களா என்ற கேள்வியுடன் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் லைக் தெரிவித்து கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர்.
ஒரு பயனர் இவர் தான் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதை போல உணர்கிறார், ஆனால் திறந்து கிடக்கும் ஒரு சிறிய குழி அவர் பெங்களூருவில் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தி விடும் எனக் கூறியுள்ளார். ஒரு பயனர் இவர் சீனாவில் இருந்து வந்திருக்கிறார் 2050 ஆம் ஆண்டில் இவர் வாழ்கிறார் என கூறியுள்ளார். இவ்வாறு பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications