நொய்டா: இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி . இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் இவரையே மிஞ்சும் அளவுக்கு பணக்காரராகி இருக்கிறார் ஒரு இளைஞர். அவரிடம் இருக்கும் பணத்தை எண்ணவே முடியாமல் அனைவரும் திக்குமுக்காடி போயுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞர் தீபக். இவருடைய தாயார் காயத்ரி தேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தாயார் காயத்ரி தேவியின் வங்கி கணக்கை தீபக் தான் நிர்வாகம் செய்து வருகிறார். ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று காயத்ரி தேவிக்கு சொந்தமான கோடக் மகேந்திரா வங்கி கணக்கில் திடீரென பணம் கிரெடிட் ஆனதாக மெசேஜ் வந்துள்ளது.

அவரது கணக்கில் கிரெடிட் ஆன பணத்தின் மதிப்பை அவரால் எண்ண கூட முடியவில்லை. 10,01,35,60,00,00,00,00,00,01,00, 23,56,00,00,00,00,299 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் கிரெடிட் ஆகி இருக்கிறது என மெசேஜ் வந்துள்ளது. இதனால் ஆடிப்போன அந்த இளைஞர் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு எல்லாம் இதனை அனுப்பி இவ்வளவு பணம் கிரெடிட் ஆகியுள்ளது இதனை எப்படி கணக்கிடுவது என கூட தெரியவில்லை என கூறியுள்ளார்.
சச்சின் குப்தா என்ற பத்திரிகையாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை பகிரவே இது வைரலாகி இருக்கிறது. 37 இலக்கம் கொண்ட இந்த தொகையை எப்படி அழைப்பது என பலரும் விவாதித்து வருகின்றனர். ₹1 septillion trillion அல்லது 1 undecillion என இதனை அழைக்கலாம் என சிலர் கூறுகின்றனர். சச்சின் குப்தா எனக்கு கணக்கு அவ்வளவாக தெரியாது நீங்களே இதனை கணக்கிட்டு எவ்வளவு என தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதனிடையே வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் அதிகாரிகளும் இவ்வளவு பெரிய தொகை எப்படி இந்த கணக்கிற்கு வந்தது என்பது குறித்து குழப்பம் அடைந்துள்ளனர் .இதனை எடுத்து உடனடியாக அந்த கணக்கை முடக்கியுள்ளனர் . இது தொடர்பான வருமான வரித்துறையினரிடம் தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப தவறால் இந்த பெரிய தொகை இந்த கணக்கிற்கு சென்றதா அல்லது வங்கி தரப்பில் செய்த தவறு காரணமா இல்லையென்றால் யாரேனும் நிதி மோசடி செய்பவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் தற்போதைக்கு இந்த 20 வயது இளைஞர் அம்பானியை விட பணக்காரராக மாறி இருக்கிறார் என சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications