சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் . தன்னுடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இவரது ஸ்டைலை கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
73 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டு, இளசுகளுக்கு போட்டியாக படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவரது வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது அவரது வீடு. ரஜினியின் வளர்ச்சி, சுக துக்கங்கள் என அனைத்திலும் பல தசாப்தங்களாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது அவரது போயஸ் கார்டன் இல்லம்.

போயஸ் கார்டன் என்ற உடனே இரண்டு பிரபலங்கள் தான் நமக்கு நினைவில் வருவார்கள். ஒருவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றொருவர் ரஜினிகாந்த். போயஸ்கார்டனின் மையப்பகுதியில் இருக்கும் ரஜினிகாந்தின் வீட்டின் மதிப்பு சுமார் 35 கோடி ரூபாயாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீட்டில் தான் மிகப்பெரிய திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார் மற்றும் விருந்து அளித்துள்ளார். இந்த வீட்டில் தான் ரஜினிகாந்த் தீபாவளி பொங்கல் மற்றும் தன்னுடைய பிறந்தநாள் உள்ளிட்டவற்றில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் குணத்தை போலவே அவரது வீடும் எளிமையாக ஆனால் தனித்துவ அழகை கொண்டிருக்கிறது என்கின்றனர் அவரது வீட்டிற்கு சென்று வந்தவர்கள். அவரது வீட்டின் உட்புற வடிவமைப்பு என்பது நவீன காலத்தில் கிடைக்கும் சௌகரியங்களோடு பாரம்பரிய அழகியலும் கலந்திருக்கிறது. வீட்டின் வடிவமைப்பும் மர வேலைப்பாடுகளும், எளிய வண்ணங்களும் மினிமலிசம் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
வீட்டின் சமையலறை பாரம்பரியமும் நவீனமும் கலந்த கலவை. சமகால வசதிகளோடு,சிவப்பு கிரானைட் பொறுத்தி, நவீன எலக்ட்ரிக் சிம்னியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்தின் அழகே வீட்டை சுற்றி நிறைந்திருக்கும் பசுமை. புல்வெளிகளால் நிரம்பி இருக்கும் வீட்டின் வெளிப்புறம் மனதை சாந்தப்படுத்தும் வகையில் இருக்கிறது. இங்கு தான் ரஜினிகாந்த் பல்வேறு ஊடக சந்திப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்.
ரஜினிகாந்திற்கு சென்னை போயஸ் கார்டன் மட்டுமல்ல வேறு மாநிலங்களிலும் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக புனேவில் அவர் ஒரு சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்திருக்கிறார்.முழுக்க முழுக்க வெண்மை நிறத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் புனே இல்லமும் அதன் வடிவமைப்பு மற்றும் அழகியலில் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறதாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications