சோலாப்பூர்: வாழ்க்கை அதன் போக்கில் நம்மை அழைத்துச் சென்றாலும் விடாமுயற்சி ,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் நிச்சயம் நம் போக்கிற்கு வாழ்க்கையை கொண்டு வர முடியும். இதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு நபர் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ராஜேஷ் டோங்கிரி மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்தமாக அப்பளம் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். சுமார் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக ஏழாம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்திய ராஜேஷ் தற்போது ஒரு முதலாளியாக மாறி இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோலாப்பூர் என்ற ஒரு கிராமம். இங்கே மகாலட்சுமி கிரஹ உத்யோக் என்ற பெயரில் தான் இவரது அப்பளம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ராஜேஷின் பெற்றோர் சோலாப்பூரில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் திடீரென அந்த மில் மூடப்பட்டதால் அவரது குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது. இதனால் ராஜேஷ் தன்னுடைய பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
7ஆம் வகுப்புடன் பள்ளிபடிப்பு தடைபட்டு போனது. குடும்ப வறுமையால் தானும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அந்த சிறு வயதிலேயே இவரது உழைப்பு தொடங்கிவிட்டது.
இதனிடையே அவரது தாய்க்கு ஒரு யோசனை தோன்றியது வீட்டிலேயே சிறிதளவில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார். உள்ளூரில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. இதனை தெரிந்து கொண்ட ராஜேஷ் இதையே பெரிய தொழிலாக்க வேண்டும் என முடிவு செய்தார்.
2013 ஆம் ஆண்டில் முதன்முறையாக நான்கு பெண்களை பணிக்கு அமர்த்தி சிறிய அளவில் மகாலட்சுமி அப்பளம் என்ற பெயரில் தொழில் தொடங்கினார். பின்னர் படிப்படியாக அதனை விரிவுபடுத்தினார். சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வந்த அவர், உணவகங்களில் ஆர்டர் பிடிக்க ஆரம்பித்தார். அது அவருக்கு நல்ல லாபத்தையும் நிலையான வாடிக்கையாளர்களையும் தந்தது.
ராஜேஷ் தற்போது சோலாப்பூர் நகரில் மட்டும் மகாலட்சுமி பப்பட் என்ற பெயரில் 14 உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறார். இங்கே சுமார் 6000 பெண்கள் அப்பளம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இங்கே தயாரிக்கப்படக்கூடிய அப்பளமானது மும்பை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மும்பையில் செயல்படும் பல உணவகங்களில் இந்த அப்பளத்தை தான் பயன்படுத்துகிறார்களாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications