சென்னை: அவர் வீட்டைவிட்டு கிளம்பியபோது கையில் இருந்தது வெறும் 200 ரூபாய். இருந்தாலும் மனம் அசராமல் தனது இலக்கை நோக்கி வைராக்கியத்துடன் புறப்பட்டார். போன இடத்தில் வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் கௌரவம் பார்க்காமல் எச்சில் பாத்திரங்களைக் கழுவினார். சற்றும் மனம்தளராமல் இந்த வேலையைத் தொடர்ந்தார். இருந்தாலும் அவரது மனதுக்குள் உழைத்து முன்னேற வேண்டும் என்ற கனல் தகித்துக் கொண்டே இருந்தது.
சளைக்காமல் உழைத்தார். இப்போது அவரது தொழில் சாம்ராஜ்ஜியம் வேறு லெவலில் விஸ்தீரணம் ஆகி உள்ளது.

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது: அந்த சாதனையாளர் பெயர் பிரேம் கணபதி. உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது பிரபலமாக உள்ள Dosa Plaza என்ற ரெஸ்டாரண்ட் செயின் தொழிலுக்கு அதிபதி. இந்தியா உள்பட நியூசிலாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமீரகம் நாடுகளில் இவருக்கு 72 கிளைகள் உள்ளன.
பிரேம் கணபதியின் ஹோட்டலில் 105 ரகங்களில் தோசைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே நாகலாபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரேம் கணபதி மிகச் சொற்பமான தொகையில் தனது தொழிலைத் தொடங்கினார். அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பின்னர் வேலைதேடி சென்னைக்கு வந்துவிட்டார்.
சின்னச்சின்னதாக வேலைகள் பார்த்து வந்த பிரேம் கணபதி ஒருகட்டத்தில் சென்னையிலிருந்து கிளம்பி மும்பை சென்றடைந்தார். அவருக்கு மராத்தியும் தெரியாது ஹிந்தியும் தெரியாது. தொடக்ககாலத்தில் கால் ஊன்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு கட்டத்தில் மும்பையில் அறிமுகமான ஒரு தமிழ்க்குடும்பம் மூலம் சிறிய பேக்கரி ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையைப் பெற்றார்.
அங்குமட்டுமல்லாமல் மேலும் சில பேக்கரிகளில் வேலைபார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்தார். பின்னர் தனக்கென்று ஒரு வியாபாரத்தைத் தொடங்குவது குறித்து முடிவு செய்தார்.
கையில் இருந்த 1000 ரூபாயை வைத்து தோசைக்கடையை கடந்த 1997ஆம் ஆண்டில் பிரேம் கணபதி தொடங்கினார். ஒரு ஸ்டோர் முன்பாக சிறிய இடத்தைப் பிடித்து அங்கு தள்ளுவண்டி அமைத்து ரகம் ரகமாக தோசைகளை செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்றார். சுவையில் தனித்துவத்தை படைத்தார்.
இதைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் மும்பையின் வாஷி பகுதியில் உள்ள ஒரு மாலில் கடையைத் தொடங்கினார். அதன்பின்னர் பிரேம் கணபதியின் வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம்தான். வெறும் ஆயிரம் ரூபாயில் தொடங்கிய பிரேம் கணபதியின் வியாபாரம் இப்போது சுமார் 50 கோடி ரூபாயை எட்டிப் பிடித்தது. தோசை மன்னன் என்ற பட்டத்தையும் பெற்றார்.


Click it and Unblock the Notifications