ஸ்டார்ட் அப் நிறுவன ஊழியர் ஒருவர் லிங்க்டுஇன் பதிவை லைக் செய்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிட் என்ற வலைத்தளத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பயனாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பணி அனுபவங்கள், பணி சூழல்கள் மற்றும் வேலையில் அவர்களுக்கு இருக்கும் சவால்கள் உள்ளிட்டவற்றை இதில் பதிவு செய்வார்கள்.
அந்த வகையில் அண்மையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இதில் வெளியிட்ட பதிவு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த முன்னாள் ஊழியர் ரெட்டிட் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மோசமான பணி சூழல்கள் தொடர்பான லிங்க்டுஇன் பதிவை லைக் செய்த காரணத்திற்காக தன்னுடைய நிறுவனம் தன்னை பணியிலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த பயனாளர் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களையோ அல்லது அவர் பணி செய்த நிறுவனத்தின் பெயரையோ வெளியிடவில்லை.

லிங்க்டுஇன் தளத்தில் மோசமான பணி கலாச்சாரம் தொடர்பான ஒரு பதிவை லைக் செய்த ஒரே காரணத்திற்காக என்னுடைய முதலாளி வேலையை விட்டு நீக்கி விட்டார் என அதில் பதிவிட்டுள்ளார். தான் வேலை செய்து வந்த அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மனநலம் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்திற்குள் மிக மோசமான பணி கலாச்சாரமே இருந்து வந்தது என்றும் பல நேரங்களில் தான் கண்ணீருடன் தான் அலுவலகத்தில் இருந்தே வெளியேறுவேன் என்றும் அந்த அவர் பதிவு செய்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் வேலை செய்தது நரகத்தில் இருந்ததை போல இருந்தது என அவர் கூறியுள்ளார். தன்னுடைய தலைமை செயல் அதிகாரி மிக மோசமானவர், அவரது மோசமான செயல்முறைகளால் தான் அவ்வப்போது மன அழுத்தத்திற்கு ஆளாகியதாகவும் அந்தப் பெண் பதிவில் கூறியுள்ளார். பல சமயங்களில் தான் அலுவலக ஓய்வறைக்கு சென்று அழுது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலைமை செயல் அதிகாரி திடீரென ஒரு நாள் அவரை அழைத்து நிறுவனத்தை பற்றி தவறான தகவல்களை நீ பரப்பி வருகிறாய் எனக் கூறியுள்ளார். மோசமான பணி கலாச்சாரம் தொடர்பான ஒரு லிங்க்டுஇன் பதிவை இவர் லைக் செய்திருப்பதையே அவர் காரணமாக கூறினாராம். தனக்கு எந்தவித எச்சரிக்கையோ எந்தவித நோட்டீசையோ வழங்காமல் உடனடியாக பணியில் இருந்து நீக்கிவிட்டனர் என அந்தப் பெண் தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.
அவரது இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதான் கார்ப்பரேட் உலகின் உண்மை முகம் என ஒரு பயனாளர் கூறியுள்ளார். நீங்கள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் வெளிப்படையாக கூறலாம் என நம்மிடம் தெரிவிப்பார்கள் ஆனால் நம் பிரச்சினையை கூறும் போது நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டும் என்று தான் பார்ப்பார்கள் என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications