ஹைதராபாத்தில் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனம் நடத்தி 7000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிபி ஸ்டாக் புரோக்கிங் (DB Stock Broking) என்ற ஒரு நிறுவனம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, கௌஹாத்தி மற்றும் நல்பாரி ஆகிய நகரங்களில் அலுவலகங்களை அமைத்து பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மீது ஹைதராபாத்தை சேர்ந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் பொருளாதார முறைகேடு பிரிவில் புகார் வழங்கி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி 37 வயதான மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் டிபி ஸ்டாக் புரோக்கிங் என்ற நிறுவனத்தில் 11 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்வதாகவும் அந்த நிறுவனம் தனக்கு உறுதி அளித்த லாபத்தையும் வழங்கவில்லை தன்னுடைய முதலீடு தொகையையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபங்கர் பர்மன் என்பவருக்கு சொந்தமானது.

இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது பல்வேறு நகரங்களிலும் வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கிறது. அதாவது முதலீட்டு தொகைக்கு ஓராண்டுக்கு 120 சதவீதம் வட்டி ,அரையாண்டுக்கு 54 சதவீதம் வட்டி, மாதந்தோறும் 7 சதவீதம் வட்டி என விளம்பரம் செய்து முதலீட்டாளர்களிடமிருந்து கணிசமான தொகை பெற்றுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு வட்டியையும் வழங்கவில்லை, முதலீட்டு தொகையையும் திரும்ப வழங்கவில்லை.
இதனிடையே ஐதராபாத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். சிலர் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தங்களுக்கு வட்டி பணமும் வரவில்லை, முதலீட்டு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
டிபி புரோக்கிங் நிறுவன உரிமையாளரான தீபங்கர் பர்மன், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அவர் தற்போது வெளிநாடு தப்பி சென்று தஞ்சம் அடைந்து இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே அவரை தாயகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என ஏராளமான முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். சுமார் 27,000 பேர் இவரிடம் 7000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications