டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் திடீர் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்தன் டாடாவின் நினைவுகளை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரத்தன் டாடா அவர்களின் மறைவினை அடுத்து டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ரத்தன் டாடா இறப்பு குறித்து விமானிகள் அறிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களின் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானி ஒருவர் ”மிகுந்த வருத்தத்தோடு இந்த செய்தியை நான் பகிர்ந்து கொள்கிறேன். ரத்தன் டாடா அவர்கள் காலமானார். அவருடைய தொலைநோக்கு பார்வையை நோக்கி நாம் தொடர்ந்து பயணம் செய்யப் போகிறோம் ,அவருடைய தொலைநோக்குப் பார்வையே நமக்கு வழிகாட்டியாகவும் அமையும்” என கூறுகிறார். இந்த வீடியோ எக்ஸ் தள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
ஏராளமானவர்கள் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்டு பின்னர் மத்திய அரசிடம் சென்று மீண்டும் டாடா நிறுவனத்திடமே வந்தது.

1932-ஆம் ஆண்டில் தான் டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான போக்குவரத்து நிறுவனம் ஜேஆர்டி டாடா அவர்களால் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியமயமாக்கினார்.
1990களில் மத்திய அரசு தனியார் நிறுவனங்களும் இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை வழங்குவதற்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து ஏர் இந்தியா அதன் அடையாளத்தை இழக்க தொடங்கியது. அதுமட்டுமின்றி நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாகவும் மாறியது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதில் மத்திய அரசு பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.

எனவே ஏர் இந்தியா பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முயற்சி செய்தது. அப்போது தான் ஏர் இந்தியா நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான tata குழுமமே வாங்குவதற்கு முன் வந்தது. 18000 கோடி ரூபாய் கொடுத்து டாடா குழுமமே ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்கியது. கிட்டதட்ட 68 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமம் ஏர் இந்தியாவை மீண்டும் வாங்கியது. இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட ரத்தன் டாடா ஏர் இந்தியாவை மீண்டும் ஒரு வலுவான விமான போக்குவரத்து நிறுவனமாக மாற்றினார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications