பெங்களூரு: இந்தியாவிலேயே வீட்டு வாடகைகள் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாக பெங்களூரு இருக்கிறது. இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு திகழ்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை தேடி பெங்களூரு நகருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதை விடுத்து கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்கின்றன. எனவே பெங்களூருவில் வீட்டு வாடகைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை 50,000 ரூபாயை கடந்து இருப்பதாக பெங்களூர் வாசிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே கொண்ட ஒரு வீடு 25 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஒரு அறையின் நடுப்பகுதியில் நின்று தன்னுடைய கைகளை இரண்டு பக்கமாக நீட்டுகிறார். அப்போது அவருடைய கைகள் இரண்டும் இரண்டு பக்கமும் சுவரில் தொடுகின்றன. இதுதான் இந்த அறையின் அகலம் அதே போல ஒரு காலை சுவற்றில் வைத்து கொண்டு மற்றொரு சுவரில் கையை வைத்து நிற்கிறார். இது அறையின் நீளம் என வீடியோவில் விவரிக்கிறார்.
மிகச் சிறிய அளவிலான இந்த அறைக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை என அவர் கூறுகிறார். இந்த அறையுடன் மிகச் சிறிய ஒரு பால்கனியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் பெங்களூருவில் வாடகைக்கு இருப்பவர்களின் நிலைமை என அவர் பதிவு செய்துள்ளார்.
என்னுடைய நண்பரின் அறைக்கு வந்தேன் அதன் அளவை பார்த்தவுடன் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன் என அவர் கூறியுள்ளார். இதுபோல சிறிய அறையில் வாடகைக்கு இருப்பதில் ஒரு பலன் இருக்கிறது நாம் அதிகமாக எந்த பொருளையும் வாங்க தேவையில்லை எனவே நீங்கள் நிறைய பணத்தை சேமித்து அதனை வாடகையாகவே செலுத்தி விட முடியும் என நக்கலாக பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரது பார்வையை பெற்றுள்ளது. ஒரு பயனர் பெங்களூருவுக்கே இப்படி என்றால் மும்பைக்கு வந்து பாருங்கள் என பதிவு செய்துள்ளார். இதேபோல மும்பையில் மிகச் சிறிய அறை கொண்ட ஒரு வீடு 45 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு வெளியானது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications