உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின் போது 20 லட்சம் ரூபாய் பணத்தை மணமகனின் குடும்பத்தினர் வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வல நிகழ்வின்போது தான் இவ்வாறு 20 லட்சம் ரூபாய் பணத்தை மணமகன் குடும்பத்தினர் காற்றில் வீசினர். 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மணமகனின் குடும்பத்தினர் இவ்வாறு ஊர்வலத்தின் போது வீசியதாக சொல்லப்படுகிறது .

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருக்கக்கூடிய இந்த வீடியோவில் ஒரு வீட்டின் மாடியிலும் ஒரு ஜேசிபி மீதும் நின்று கொண்டு சிலர் பணத்தை வீசுவதும் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து செல்வதும் இடம்பெற்றுள்ளது.
தேவல் ஹவா என்ற கிராமத்தில் அப்சால் மற்றும் அர்மான் ஆகிய இருவருக்கும் நடைபெற்ற திருமணத்தின் போது தான் மணமகன் குடும்பத்தினர் இவ்வாறு பணத்தை வீசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே போல குஜராத் மாநிலத்தில் ஒரு திருமணத்தின் போது மணமகனின் உறவினர்கள் வீட்டு மாடியில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை பண மழையாக பொழிந்தனர். மணமகன் ஊர்வலம் சென்ற தெருவின் இரண்டு பக்கமும் நின்று கொண்டு மணமகன் மீது பணத்தை கொண்டு வீசினர்.
உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. சமூக வலைத்தள பயனாளர்கள் வெறும் கௌரவத்தை வெளிக்காட்டுவதற்காக எவ்வளவு பணத்தை வீண் செய்கிறார்கள் என வினவுள்ளனர். ஒரு பயனாளர் என்னுடைய மகனின் மருத்துவ சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் திரட்ட முடியாமல் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இங்கே 20 லட்சம் ரூபாயை வீசி எரிந்துள்ளனர் என கூறியுள்ளார். ஒரு பயனர், படித்தவர்கள் போல இவர்களின் செயல் இல்லை என கூறியுள்ளார். ஒரு பயனர், வரி செலுத்தாமல் தப்பிப்பதற்கு இப்படி செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
ஒரு பயனர் இந்த பணத்தை கொண்டு ஏழை மக்களின் திருமணத்திற்கு உதவி செய்திருக்கலாம், ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கி இருக்கலாம், மாணவர்களின் கல்விக்காக உதவி இருக்கலாம் என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பணத்தை வீசாமல் அங்கே வசிக்கும் ஏழை மக்களை வரவழைத்து வழங்கி இருந்தால் அவர்கள் வாழ்த்தி இருப்பார்களே என சிலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications