சீனா: சீனாவை சேர்ந்த ஒரு நபர் தனக்கு அரிதான புற்றுநோய் இருப்பதாகவும் சிகிச்சைக்கு நிதி தேவைப்படுகிறது என்றும் கூறி 81 லட்சம் ரூபாயை பெற்று அந்த பணத்தில் புதிதாக குடியிருப்பினை வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுபெய் மாகாணத்தை சேர்ந்த 29 வயதான நபர் தான் லான். இவர் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனக்கு ஹார்ட்கின் லிம்போமா என்ற அரிதான புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தார். இந்த அரிதான புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு தனக்கு பெரிய அளவிலான தொகை தேவைப்படுவதாகவும், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை வழங்கி தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிரவுட் ஃபண்டிங் தளம் ஒன்றில் அவருக்காக நிதி திரட்டப்பட்டது .அவர் இந்த புற்றுநோயால் என்னென்ன கஷ்டப்படுகிறார் என்பது குறித்தெல்லாம் வீடியோக்கள் பகிரப்பட்டது. எனவே பலரும் தானாக முன்வந்து அவருக்கு நன்கொடை அளித்தனர். எனவே அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் 7 லட்சம் யுவான்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 81.64 லட்சம் ரூபாய் நிதி உதவியாக மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் அவர் நவம்பர் 6ஆம் தேதி தன் நண்பர்களோடு வீடியோ காலில் கலந்துரையாடியுள்ளார். அப்போது புதிய குடியிருப்பில் இருந்து அவர் பேசுவதை நண்பர்கள் கண்டுள்ளனர். அப்போது கேட்டதற்கு இது நான் புதிதாக வாங்கிய வீடு, இதன் மதிப்பு 7.38 லட்சம் யுவான் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் உடனடியாக சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இவருக்கு உதவி செய்த பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக இவர் திருமணத்திற்காக வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் தன்னுடைய குடும்பம் பணக்கார குடும்பம் என்றும் தன்னுடைய சொத்துக்கள் மூலம் ஆண்டுதோறும் வாடகை வருமானமாக மட்டும் 1. 45 லட்சம் யுவான்கள் தனக்கு கிடைப்பதாகவும் தெரிவித்து இருந்தாராம். ஆனால் இந்த நிதி திரட்டுவதற்கான தளத்தில் தனக்கு எந்த ஒரு சொத்தும் கிடையாது தான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என பொய்யாக கூறி இவர் பணம் திரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி இவருக்காக நிதி திரட்டி வழங்கிய அந்த தளமானது அந்த பிரச்சாரத்தை நிறுத்தியதோடு அவருக்கு கிடைத்த சுமார் பணத்தையும் திரும்பப்பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதனை நன்கொடையாக வழங்கியவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் என அந்த தளம் கூறியுள்ளது. இவருடைய இந்த செயலால் உண்மையாகவே பணம் தேவைப்படுபவர்கள் வந்து கேட்டால் கூட நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும் என இவருக்கு நிதி வழங்கிய பலரும் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications