பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸி பெயரில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அப்படி ஒரு இளம் பெண்ணிடம் ஓலா, ஊபர் போன்ற போலி செயலியை காண்பித்து 3000 ரூபாய் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல். அது மட்டுமின்றி மிக மோசமான ஒரு டாக்ஸி அனுபவம் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். கோவா-வில் இதுப்போன்ற டாக்சி மோசடிகள் அடிக்கடி நடப்பது வழக்கம், இதனாலேயே சமீப காலமாக கோவா-விற்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.
அந்த இளம் பெண் ரெட்டிட் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இரவு 10:30 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்து தான் ஓலா அல்லது ஊபர் புக் செய்வதற்காக காத்திருந்ததாகவும் அப்போது ஒரு நபர் தன்னிடம் வந்து இதுவும் ஓலா உபரை போன்ற ஒரு செயலி தான், நான் என்னுடைய நண்பரை குறிப்பிட்ட இடத்தில் டிராப் செய்யப் போகிறேன் உங்களுடைய இல்லமும் அந்த இடத்திற்கு அருகில் தான் இருக்கிறது நாம் இந்த செயலியில் ரைட் ஷேர் செய்தால் உங்களுக்கு 450 ரூபாய் தான் வரும் என கூறினாராம்.

இதனை ஏற்றுக் கொண்ட அந்த பெண் வாகனத்தில் ஏறியிருக்கிறார். அங்கிருந்து பேருந்தில் தன்னுடைய இடத்திற்கு சென்று சேர 350 ரூபாய் ஆகும், காரில் 450 ரூபாய் தானே ஆகிறது என நம்பி அவர் அந்த காரில் ஏறியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஓட்டுநர் மற்றும் அந்த நபர் இந்த இளம் பெண் ஆகிய மூன்று பேரும் காரில் சென்றுள்ளனர். வழியில் மற்றொரு நபரும் காரில் ஏறி இருக்கிறார்.
பின்னர் அவர்கள் ஒரு கடையில் நிறுத்தி டீ குடித்துள்ளனர். அந்த டீக்கு இவரை பணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் போட்டு அதற்கும் இவரை பணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினார்களாம்.
இதனை அடுத்து வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று போதை மருந்து உள்ளிட்டவற்றை உட்கொண்டிருக்கிறார்கள். இதனை கண்டு பயந்த அந்தப் பெண் உடனடியாக காரில் இருந்து இறங்கிவிட்டாராம். ஆனால் அவர்கள் 3000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே காரில் இருந்து இறக்கி விடுவோம் எனக்கூறி மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
பின்னர் தான் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது தான் பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதை அவர் அறிந்துள்ளார். இதனை அடுத்து ஊபரில் கார் புக் செய்து தன் வீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்திற்கு வருபவர்கள் இதுபோன்ற டாக்ஸி மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய இந்த மோசமான அனுபவத்தை பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பொதுவாக இது போன்ற தனியாக செல்லும் போது நம்பகமான செயலிகளில் மட்டுமே கார் புக் செய்ய வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் பேச கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications