சென்னை: இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. பால் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது குழந்தையின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுவது கிடையாது.
ஆதார் அப்டேட்: குழந்தைக்கு ஐந்து வயது முடிந்த பின்னர் பெற்றோர் ஆதார் மையத்திற்கு அழைத்து சென்று குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏழு வயதிற்குள் இதனை செய்ய தவறினால் குழந்தையின் ஆதார் அட்டை செயலிழந்து விடும். அதே போல பிள்ளைகள் 15 வயதை எட்டிய உடன் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் புகைபடத்தை அப்டேட் செய்ய வேண்டும்.

பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம்: இந்த சூழலில் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். ஆதாரை நிர்வகித்து வரும் UIDAI அமைப்பு குழந்தைகளின் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும்படி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் சுமார் 17 கோடி குழந்தைகளின் ஆதார் தகவல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறதாம்.
ஏன் ஆதார் அப்டேட் முக்கியம்: குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்களை பெறுவது, 15 வயதுக்கு மேற்பட்டோர் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு எல்லாம் அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கட்டாயம். பல சமயங்களில் பெற்றோர் ஆதார் விவரங்களை கடைசி நிமிடத்தில் அப்டேட் செய்வதற்கு அலைவதை நாம் பார்க்க முடிகிறது.
புதிய வசதி: இந்நிலையில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் ஆதார் தகவல்களை அப்டேட் செய்வதை எளிமையாக்கும் வகையில் ஒரு சேவையை தனித்துவ அடையாள அமைப்பு கொண்டு வர இருக்கிறது. இது குறித்து யுஐடிஏஐ தலைவர் புவேஷ் குமார் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாநில அரசுகளுக்கு கடிதம்: அந்த கடிதத்தில் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட்டுகளை முடிப்பதற்காக பள்ளிகளில் ஆதார் முகாம்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக அனைத்து மாநில பள்ளிக்கல்வி துறையுடனும் யுஐடிஏஐ அமைப்பு கைகோர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் Unified District Information System for Education Plus எனப்படும் ஒருங்கிணைந்த கல்வி தகவல் அமைப்பில் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதாவது அனைத்து பள்ளிகளும் இந்த தளம் வாயிலாக தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஆதார் அப்டேட் நிலுவையில் இருப்பவர்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமாம்.
பள்ளிகளில் முகாம்: இதன் அடிப்படையில் யுஐடிஏஐ அமைப்பும் பள்ளி நிர்வாகமும் இணைந்து ஆதார் அப்டேட் முகாம்களில் பள்ளிகளிலேயே நடத்த உள்ளன. எனவே பெற்றோர் இந்த முகாம்களை பயன்படுத்தி பள்ளியிலேயே ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்காக பெற்றோர் பிள்ளைகளை அழைத்து கொண்டு இ சேவை மையங்களுக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது.
இனி அலைய வேண்டாம்: பள்ளி நிர்வாகங்கள் சார்பாக பெற்றோருக்கு ஆதார் அப்டேட் முகாம் தொடர்பாக விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தமிழ்நாடு அரசும் தபால் துறையும் இணைந்து பள்ளிகளில் ஆதார் அப்டேட் முகாம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications