இந்திய குடிமக்களின் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் அட்டை செயல்படுகிறது. ஒரு சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி வங்கி கணக்கு தொடங்குவது, இன்சூரன்ஸ் எடுப்பது என பல சேவைகளுக்கும் ஆதாரை நாம் பயன்படுத்துகிறோம்.
நம் ஆதார் எண்ணில் பெயர், முகவரி, பிறந்த தேதி என மட்டுமில்லாமல், புகைப்படம், கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கான அடையாள ஆவணமாகவும் ஆதார் கார்டை நாம் வழங்குகிறோம். அதில் தான் தற்போது பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நம்முடைய புகைப்பட அடையாள ஆவணம், முகவரிக்கான அடையாள ஆவணம், பிறந்த தேதிக்கான அடையாள ஆவணமாக நாம் ஆதார் தகவல்களை சமர்ப்பிக்கிறோம். இதில் நம் பிறந்த தேதிக்கான அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்த முடியாது என UIDAI விளக்கம் தந்துள்ளது.

அதாவது, ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், ஒருவரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் தந்துள்ளது. பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு நடைமுறைகளில் பயன்படுத்துவதில் நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில், ஆதார் அட்டை வழங்கும் இந்த அமைப்பு இந்த விளக்கத்தை தந்துள்ளது.
அதாவது ஆதாரில் உள்ள பிறந்த தேதியின் துல்லியம் குறித்து சர்ச்சை எழும் போது அதனை நிரூபிக்கும் பொறுப்பு அந்த ஆதார் எண் வைத்திருப்பவரையே சாரும், ஒரு தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அங்கீகாரச் செயல்முறைக்கு உட்பட்டு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம், ஆனால் அதுவே பிறந்த தேதிக்குச் சான்றாக அமையாது என்று UIDAI திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 2016 ஆதார் சட்டம், ஆதாரை ஒரு அடையாளச் சான்றாகத் தெளிவாக அங்கீகரிக்கிறது; ஆனால், பிறந்த தேதியைச் சரிபார்ப்பதற்கான அங்கீகாரத்தை அது வழங்குவதில்லை என கூறியுள்ளது.
யுஐடிஐஏ-இன் இந்த விளக்கத்தால் வயதை சரிபார்க்கும் கட்டாயம் உள்ள சேவைகளுக்கு இனி ஆதார் மட்டுமே சமர்ப்பித்தால் போதாது. அரசு தரப்பிலோ அல்லது நிறுவனங்கள், அமைப்புகள் உங்களின் வயதை உறுதிப்படுத்த ஆதார் மட்டுமில்லாமல் வேறு ஆவணங்களை கேட்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் வயதுச் சரிபார்ப்பு தேவைப்படும் சமயங்களில் ஆதார் மட்டுமில்லாமல், கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
எனவே ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ், பள்ளி டிசி, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் சான்றிதழாக வழங்கலாம். பொதுமக்கள் ஆவண சரிபார்ப்புக்கு செல்லும் போது ஆதார் மட்டுமில்லாமல் கூடுதல் ஆவணங்களையும் கொண்டு செல்வது நல்லது. குறிப்பாக போட்டி தேர்வு, பொது தேர்வு, வேலைவாய்ப்பு சமயங்களில் கட்டாயம் ஆதாருடன் ஒரு கூடுதல் ஆவணத்தையும் சமர்ப்பிக்க நேரிடலாம்.


Click it and Unblock the Notifications

