இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும் வேலை நிமித்தமாக , கல்வி நிமித்தமாக செல்வதற்கும் ரயில் பயணங்களை பயன்படுத்துகிறார்கள். ரயில்களில் குறைந்த டிக்கெட்டில் செல்ல முடியும் , பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும் என்பது தான் இந்தியர்கள் ரயில் பயணங்களை நம்புவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சிரமங்கள் இருந்தன . ஏஜென்ட்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பல்க்காக முன்பதிவு செய்து விடுவதால் சாதாரணமான மக்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருந்தன.

எனவே இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் மற்றும் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தது. அது தவிர ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி உள்ளீடு செய்தால் மட்டுமே இனி டிக்கெட் முன்பதிவு ஆகும் என்பதையும் நடைமுறைக்கு கொண்டு வந்தது .
இந்த புதிய நடைமுறைகள் மூலம் இதுநாள் வரை டிக்கெட் முன்பதிவில் நடைபெற்ற முறைகேடுகள் பெருமளவில் குறைந்து இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்திருக்கிறது. மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த மூன்று கோடி ஐஆர்சிடிசி கணக்குகளை முடக்கி இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்திருக்கிறது. தற்போது தட்கல் டிக்கெட் கிடைப்பது பயணிகளுக்கு எளிமையானதாக மாறி இருக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருக்கிறார்.
டிசம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஆன்லைன் தட்கல் முன்பதிவில் ஆதார் ஒடிபி முறை 322 ரயில்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறுகிறார். எனவே இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .அதேபோல டிக்கெட் முன்பதிவு மையங்களில் உள்ள தட்கல் முன்பதிவுக்கும் ஆதார் ஒடிபி முறை 216 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார் .
96 முக்கிய ரயில்களின் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 95 சதவீதம் அதிகரித்துள்ளது என அவர் கூறியிருக்கிறார் . ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு பயனர்களின் கணக்குகளை மறு ஆய்வு செய்ததாகவும் இதில் சந்தேகத்திற்கு இடமான போலியான கணக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ரயில்வே டிக்கெட் முன்பதிவு முன்பை விட வெளிப்படை தன்மை கொண்டதாகவும் , சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்க கூடியதாகவும் மாறி இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications