ஆதார் எண் மூலம் மத்திய மாநில அரசுகள் நேரடியாக பல சேவைகளை மக்களுக்கு அளித்து வருவது மூலம் பல கோடிகளை சேமித்து உள்ளது. இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடக்க துவங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் ஊழல், கறுப்புப் பணம் மற்றும் பினாமி பரிவர்த்தனைகளைத் தடுக்க மக்களின் அசையா மற்றும் அசையும் சொத்து ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது குறித்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கிற்கு, டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை மத்திய அரசிடம் பதிலும் விளக்கமும் கேட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மத்திய நிதி, சட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகங்களுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
மேலும் இரு நீதிபதிகள் அடங்கிய பென்ச் இது "நல்ல விஷயம் என்றும், மத்திய அரசு தரப்பில் இருந்து பதில்கள் வரும் வரை காத்திருப்போம்" என்று வாய்மொழியாகக் கூறினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18 ஆம் தேதி நடக்கும் என இந்த பென்ச் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை தொடுத்த மனுதாரரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய், தாக்கல் செய்த மனுவில், ஊழலைத் தடுக்கவும், சட்டவிரோதமான முறையில் குவித்துள்ள பினாமி சொத்துக்களைக் கைப்பற்றவும் உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை.மேலும் ஊழலுக்கும் கறுப்பு பணத்திற்கும் எதிராக போராடுவதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்துவது மூலம் அரசு வலுவான செய்தியை கொடுக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் சொத்துக்களை ஆதாருடன் இணைப்பது உறுதியாக்கும் பட்சத்தில் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சியில் இரண்டு சதவீதம் அதிகரிக்கும் எனவும் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

2019 ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், சொத்துப் பதிவு மற்றும் நிலம் மாற்றும் பணியில் அடையாளச் சான்றாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் அது ஒரு விருப்ப தேர்வு மட்டுமே, கட்டாயமில்லை. மேலும் அதை கட்டாயமாக்குவதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்றும் டெல்லி அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications