இந்தியர்களுக்கு வங்கி கணக்கு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. நம் நிதி மேலாண்மையில் வங்கி கணக்கு தான் முக்கியமாக உள்ளது. சம்பளம் பெறுவது, கடன் வாங்குவது, யுபிஐ பயன்படுத்துவது என அனைத்திற்குமே வங்கி கணக்கு கட்டாயம்.
இந்தியாவில் பல்வேறு தனியார் வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளும் வங்கி சேவை வழங்குகின்றன. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தவிர மற்ற அனைத்து வகை அக்கவுண்ட்டுகளுக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பேலன்ஸை பராமரிக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் என இதனை அழைக்கிறார்கள். இவ்வாறு மினிமம் பேலன்ஸ் பராமரிக்கப்படவில்லை அதற்கென அபராத தொகை வசூல் செய்யப்படுகிறது.

மினிமம் பேலன்ஸ் அபராதங்கள் நியாயமற்றவை என நீண்ட காலமாகவே குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததால் வங்கிகள் அபராதமாக பெற்ற தொகை மட்டுமே சுமார் 19,000 கோடி ரூபாய் என தெரிய வந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகள் 19,000 கோடி ரூபாயை மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸை பராமரிக்காத காரணத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்துள்ளது.
மத்திய அரசே நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, வங்கிகள் மூன்று ஆண்டுகளில் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை அபராத முறையிலேயே ஈட்டி இருக்கின்றன இது பெரும் பணக்காரர்களிடம் இருந்து வரவில்லை, பெரும் கடனாளிகள் இடமிருந்து வசூல் செய்யப்படவில்லை, இந்தியாவின் ஏழை மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா வறுமையில் இருப்பது தான் என சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இதனை பதிவு செய்துள்ள ராகவ் சத்தா, மினிமம் பேலன்ஸ் இல்லை என ஒரு விவசாயியிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது, ஓய்வூதியதாரர் ஒரு மருத்துவ தேவைக்கு கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டார் பேலன்ஸ் குறைந்து விடுகிறது மினிமம் பேலன்ஸ் இல்லை என அவருக்கு ஒரு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என சாடியுள்ளார்.
அன்றாட வருமானத்தில் குடும்பம் நடத்தும் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து சிலநூறு ரூபாய்களை எடுத்து பயன்படுத்தி விட்டார் என்பதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறும் அவர், ஏழை மக்கள் பாதுகாப்புக்காக பணத்தை வங்கி கணக்கிலேயே வைக்கிறார்கள், வங்கிகள் அவர்களுக்கு திரும்ப தருவது அபராதம் என குறிப்பிட்டுள்ளார். குறைந்த பணம் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியா என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி மினிமம் பேலன்ஸ் தொகையையும் அது தொடர்பான அபராதத் தொகையும் வங்கிகளே முடிவு செய்து கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications