திறமைக்கு அங்கீகாரம் வழங்காத இடத்தில் பணிபுரிய விருப்பம் இல்லாமல், அதிக சம்பள வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அபிஷேக் பரத்வாஜ். ஆனால் இவரது கதை கொஞ்சம் வித்தியாசமானது.
சொந்த தொழில் தொடங்கும் இவரது முயற்சி அவரது அப்பாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது மற்றும் மகனுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இருந்தாலும் அபிஷேக் தனது தொழில் முயற்சியில் உறுதியாக நின்று இன்று வெற்றியும் பெற்று விட்டார்.

பீகார் மாநிலம் அர்ராவை சேர்ந்த வழக்கறிஞர் திரிலோகி நாத் உபாத்யாய் தம்பதியினருக்கு மூத்த மகனாய் பிறந்தவர் அபிஷேக் பரத்வாஜ். இவருக்கு 3 தங்கைகள் உள்ளனர். சொந்த ஊரில் உள்ள வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
பின்னர் அபிஷேக் மேக்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு கோட்டக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றினார். அந்த நிறுவனத்தில் சுமார் 8 ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்த சூழ்நிலையில், நிறுவனத்தில் பணி உயர்வுக்காக கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை நிறுவனம் நிராகரித்து விட்டது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை எடுத்தது.
இதனையடுத்து அந்த வேலையை விட முடிவு செய்தார். அப்போது அவர் மாத சம்பளமாக ரூ.75,000 வாங்கி கொண்டு இருந்தார். இருப்பினும் துணிந்து வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகு தேநீர் விற்கும் தொழிலை தொடங்க முடிவு செய்தார். அவரிடம் ஒரு புல்லட் இருந்தது அதை பிசினஸ் பார்ட்னராக மாற்றி கொண்டார்.
டெல்லி குர்கான் நெடுஞ்சாலையில் தேநீர் விற்க தொடங்கினார். முதல் நாளில் 7 கப் டீ விற்று ரூ.75 சம்பாதித்தார். அபிஷேக் மாதா ராணியின் பக்தர், அவர் தனது தொழிலில் முதலில் சம்பாதித்த ரூ.75ஐ மாதா ராணிக்கு காணிக்கையாக செலுத்தினார். 6 மாதங்கள் புல்லட்டில் டீ விற்பனை செய்தார். மக்கள் அவரை புல்லட் சாய்வாலா என்று அழைக்க தொடங்கினர்.
அதேசமயம், நல்ல வேலையை விட்டு விட்டு டீ வியாபாரத்தை தொடங்கியது அவரது அப்பாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தனது மகனிடம் பேசுவதை நிறுத்தினார். அபிஷேக் பரத்வாஜ் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்போதும் வேலைகளில் பணிபுரிந்து வந்தனர்.
தந்தை தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டாலும், அவரின் நலன் குறித்து தனது அம்மாவிடம் அடிக்கடி விசாரித்து கொள்வார். அபிஷேக் தற்போது ஜனக் சினிமா அருகே டெல்லியின் உத்தம் நகரில் ஒரு தேநீர் கடையை நடத்தி வருகிறார்.
தற்போது மாதம் ரூ.1,00,000 சம்பாதிக்கிறார். பிற மாநிலங்களிலும் டீ கடையை திட்டமிட்டுள்ளார். அவர் அருகிலுள்ள பகுதியில் உள்ள தனது டீ கடைக்கு பிரபலமானவர். மக்கள் அவருடன் வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
என்னதான் தொழிலில் வெற்றி பெற்றாலும் அவரது மனதை இன்னும் ஒரு விஷயம் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. அவரது அப்பா இன்னும் பேசாமல் இருப்பதுதான் அதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications