உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் (Accenture) தனது உயர் அதிகாரிகளுக்கு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரு உத்தரவால் ஒட்டுமொத்த அக்சென்ச்சர் ஊழியர்கள் மத்தியிலும் லேலையை விட்டு விலக வேண்டுமா, பணிநீக்கம் செய்யப்படுவார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அக்சென்ச்சர் சிஇஓ-வும் இந்த விதியை பின்பற்ற முடியவில்லை எனில் பணியை விட்டு விலகலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
அக்சென்ச்சர் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையின் படி, இனி பதவி உயர்வு பெற விரும்பும் மூத்த ஊழியர்கள், நிறுவனத்தின் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) கருவிகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கமான பணியை சிறப்பாக செய்வது மட்டும் போதாது; இனி ஏஐ கருவிகளை தீவிரமாக பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் எவ்வாறு ஏஐ டூல்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிறுவனம் வாராந்திர அடிப்படையில் கண்காணிக்கிறது. இந்த பயன்பாட்டு அளவு தான் இனி வரும் காலக்கட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முக்கிய அளவுகோலாக இருக்கும் என அக்சென்ச்சர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களில் எப்படி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணித்து வேரியபிள் பே தொகை கொடுக்கப்படுகிறதோ. அதேபோல் அக்சென்ச்சர் ஏஐ டூல்ஸ்-ஐ எவ்வாறு ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அக்சென்ச்சர் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் முன்பே அனைத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுகொண்டு, அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிறுவனத்தில் தொடர முடியாது என்று கூறியிருந்தார். இப்போது அந்த எச்சரிக்கை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறியுள்ளது.
ஆனால் இந்த விதி அனைவருக்கும் பொருந்தாது. 12 ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இது பொருந்தாது எனவும் அக்சென்ச்சர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மூத்த ஊழியர்கள் அக்சென்ச்சர் நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், அவை தரமற்றவை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விதி நேரடியாக பாதித்தால் வேலையை விட்டு வெளியேறுவேன் என்று சிலர் கூறியுள்ளனர். இதனால் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
அக்சென்ச்சர் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை எதிர்கால வேலை முறையின் அடிப்படையாக பார்க்கிறது. இந்த புதிய மாற்றத்தில் அக்சென்ச்சர் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பது தான் ஜூலி ஸ்வீட்-ன் இலக்கு. இதற்காகவே ஏஐ கருவிகளை நிறுவனத்தின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதன் மூலம் மற்ற ஊழியர்களுக்கு இது முன்மாதிரியாக இருக்கும், மேலும் பயன்பாட்டு விகிதம் வேகமாக உயரும் என்றும் நம்புகிறது அக்சென்ச்சர்.
அக்சென்ச்சர் ஏற்கெனவே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை ஏஐ பயிற்சிக்காக செலவிடுகிறது. இது நிறுவனம் ஏஐயை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் அக்சென்ச்சர் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிகின்றனர். இந்த புதிய விதி தமிழ்நாட்டு ஐடி ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை கற்று பயன்படுத்தாவிட்டால் பதவி உயர்வு மட்டுமின்றி வேலை பாதுகாப்பும் பாதிக்கப்படலாம்.
இதை முக்கிய மாற்றமாக எடுத்துக்கொண்டு பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் இருக்கும் ஐடி ஊழியர்கள், பட்டதாரிகளும் ஏஐ திறன்களை மேம்படுத்துவது அவசியமாகிறது.
மொத்தத்தில், அக்சென்ச்சரின் இந்த கொள்கை ஏஐ எதிர்காலத்தில் ஊழியர்களின் பணியாற்றும் முறையை எவ்வாறு மாற்றும் என்பதை தெளிவுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications