உலகின் மிகப்பெரிய தொழில்முறை சேவை நிறுவனங்களில் அக்சென்ச்சர் (Accenture) நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 மாதங்களில் இந்நிறுவனம் 11,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றால் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையின் தேவைகளை கருத்தில் கொண்டு அதிகளவிலான ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மறுசீரமைப்புக்காக அக்சென்ச்சர் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.17,746 கோடி) அதிகமாக செலவிட்டுள்ளது. இதில் கணிசமான பகுதி பணி நீக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அக்சென்ச்சரின் உலகளாவிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,79,000ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 3 மாதங்களுக்கு 7,91,000 ஆக இருந்தது. மேலும், மறுசீரமைப்பு செலவு கடந்த காலாண்டில் மட்டும் 615 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால், நடப்புக் காலாண்டில் மேலும் 250 மில்லியன் டாலர் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முழு மறுசீரமைப்பு செயல்முறையும் முடிவடைந்த பிறகு, நிறுவனத்திற்கு 1 பில்லியனுக்கும் (சுமார் ரூ.8,000 கோடி) அதிகமாக சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த செயல்பாடுகள் வரும் நவம்பர் மாதம் வரை தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட், புதிய தொழில்நுட்ப யதார்த்தங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வதன் அவசரத்தை வலியுறுத்தியுள்ளார். நாங்கள் குறைந்த காலக்கெடுவில் வேகமாக செயல்பட்டு வருகிறோம். திறன்களை மாற்றுவது சாத்தியமில்லை என்ற நிலையில் மட்டுமே, ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முடிவை எடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், அக்சென்ச்சர் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை நிறுவனத்தின் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் என்றாலும், அனைவராலும் மாறிவரும் வணிகத் துறைக்கு தகவமைத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பண்டு உண்டு. கடந்த நிதியாண்டில், Generative AI தொடர்பான திட்டங்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களில் 5.1 பில்லியன் டாலர் தொகையை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. தற்போது நிறுவனத்தில் 77,000 ஏஐ மற்றும் தரவு வல்லுநர்கள் உள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 40,000 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகம் தான்.
இந்நிலையில், அக்சென்ச்சர் நிறுவனம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஐடி துறைகளில் காணப்படும் மாற்றத்தை உணர்த்துகிறது. மேலும், இதற்கு இணையாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் AI மறுசீரமைப்பின் காரணமாக 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த கன்சல்டிங் துறையும் இத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும்போது, தொழில்நுட்ப திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதும், மனித திறனைத் தக்கவைப்பதும் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications