உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அசென்ச்சர், 2024 நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை குறைத்துள்ளது. மார்ச் காலாண்டு முடியும் வேளையில் அனைத்து ஐடி நிறுவனங்களும் காலாண்டு முடிவுடன் சேர்ந்து வருடாந்திர நிதியியல் அறிக்கையும் தயார் செய்து வருகிறது
இந்த நிலையில் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் அயர்லாந்து நாட்டு நிறுவனமான அக்சென்சர் பொருளாதார சூழலில் ஏற்பட்டு உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆலோசனை சேவைகளுக்கான செலவைக் குறைத்துள்ளனர், இதனால் எங்களுடைய வருவாய் இலக்கு பாதித்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

அக்சென்சர் நிறுவனம் இந்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட நிலையில், அதன் பங்கு விலையில் ப்ரீமார்கெட்ட வர்த்தகத்தில் 5.6% சரிவைப் பதிவு செய்து, நேற்றை வர்த்தக முடிவில் 9.31 சதவீதம் சரிந்துள்ளது. இதைவிட முக்கியமாக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ பிரிவில் புதிய வர்த்தகத்தை தடுமாறி வரும் வேளையில், அக்சென்சர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக அக்சென்சர் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டில் 2%-5% வரை வருவாய் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது 1%-3% வரையிலான வருவாய் வளர்ச்சியையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் சேவைகளுக்கான டிமாண்டு அதிகரித்த அதேவேளையில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்தது. இக்காலகட்டத்தில் உலகளவில் இத்துறை நிறுவனங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
ஆனால் தற்போது வட்டி விகித உயர்வு காரணமாகத் தகவல் தொழில்நுட்ப மற்றும் கன்சல்டிங் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் வாயிலாகக் கடந்த நிதியாண்டில் சுமார் 19,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் severance pay செலவாக 450 மல்லியன் டாலர்களை அசென்ச்சர் நிறுவனம் செலவிடவுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஆலோசனை நிறுவனங்களும், செலவுகள் குறைப்பு காரணமாக இந்த ஆண்டு மந்த நிலையையே சந்தித்துள்ளன. அக்சென்சர் நிறுவனத்தின் வருவாய் இலக்கின் குறைப்பைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களும் மந்தமான காலாண்டு முடிவுகளையும், நிதியாண்டு முடிவுகளையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முதலீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் வரலாம்.
அக்சென்சர் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 16.25 பில்லியன் டாலர் முதல் 16.85 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கணித்துள்ளது. புதிய ஒப்பந்தங்கள் (New bookings) இந்த காலாண்டில் 2% சரிந்து 21.58 பில்லியன் டாலராக உள்ளது. மேலும், தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சரிந்துள்ளது.
அசென்ச்சர் நிறுவனத்தின் வருவாய் 15.80 பில்லியன் டாலராக இருந்தது, லாபத்தை பொறுத்தவரை, ஒரு பங்குக்கு 2.77 டாலர் லாபம் ஈட்டியுள்ளது. 4வது காலாண்டு முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications