ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் மது போதையால் ஏற்பட்ட பிரச்சனைகளை சொல்லி மாளாது. அதற்காக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. தற்போது அதை செயல்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் விஜய் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையையை மேற்கொள்ள 2 வார கால அவகாசமும் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை (DIPR) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 717 மதுக் கடைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த 717 கடைகளும் இன்னும் 2 வார காலத்திற்குள் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மொத்தமாக 4,765 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி செயல்படும் கடைகளில், எந்தெந்த கடைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விதி மீறி மக்களுக்கு இடையூறாக 717 கடைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

ஏன் இந்த நடவடிக்கை?: பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் காப்பதற்காகவும் சமூக சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசுக்கு கோடி கோடியாக வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் வருமானத்தை விட மக்களின் நலன் தான் முக்கியம் என்பதை முன்னிறுத்தியே தவெக அரசு பயணிக்கத் தொடங்கியுள்ளது.
முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நிமிடமே 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை" அமைக்கப்படும் என்ற ஆணையையும் பிறப்பித்தார். அப்போதே தமிழகத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பு படையை உருவாக்கவும் கையெழுத்திட்டார்.
பதவியேற்பு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், தமிழகம் தற்போது ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறினார். எனவே அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய அடுத்தடுத்த அறிவிப்புகள் அரசியலில் தவெக அரசு புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இனிவரும் காலத்திலும் இது தொடருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications